Politics
இந்தி திணிப்பு : “தமிழ்நாடு கொந்தளித்ததை ஒன்றிய அரசு மறக்கக் கூடாது...” - CPI எச்சரிக்கை!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் இந்த செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மாநிலங்களை தொடர்ந்து குறிவைத்து நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிடம் பாஜக நிதியை கொடுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தர மறுத்து வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அண்மையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி நிதியை பாஜக ஆளும் மற்றும் அதன் கூட்டணி மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், மும்மொழி கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (பிப்.15) பேட்டியளித்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.
அந்த வகையில் ஒன்றிய அமைச்சரின் நிபந்தனை கூட்டாட்சி நெறிகளை சீர்குலைக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (SSA) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் ஆக மொத்தம் ரூ.2401 கோடி ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ஒற்றிய அரசின் நிதி வழங்க முடியும் என ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 1965 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாடு ஒருமுகமாக கொந்தளித்ததை ஒன்றிய அரசு நினைவில் கொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை, இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒற்றிய அரசு ஈடுபடாது” என உறுதியளித்தார் என்பதை ஒன்றிய அரசும் பிரதமரும் மறந்து விடக்கூடாது.
கடந்த ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாட்டின் இல்லம் தேடி கல்வித் திட்டம் நல்ல பலன்களை தந்திருப்பதை சுட்டிக்காட்டி, பாராட்டியிருக்கிறது.
பாராட்டுப் பெற்ற மாநிலத்திற்கு ஊக்கம் தருவதற்கு பதிலாக, விடுவிக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துப் பழிவாங்குவது, மிரட்டுவது போன்ற அடாவடி செயலில், ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபடுவதை தமிழ்நாடு மௌனசாட்சியாக கடந்து செல்லாது. தமிழ்நாட்டின் உரிமை காக்க ஜனநாயக சக்திகள் ஓரணியாக திரண்டு போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Also Read
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!