Politics

இந்தித் திணிப்பு: "தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து வருகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருமொழி கொள்கையையே பின்பற்றி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் கல்வி துறைக்கு வழங்கவேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்று கூறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தள பதிவில், "தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.

மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது! "என்று கூறியுள்ளார்.

Also Read: இந்தி திணிப்பு : பாஜக அரசை கண்டிக்காமல் ஒளிந்திருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் !