Politics
“பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல...” - ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் இந்த செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மாநிலங்களை தொடர்ந்து குறிவைத்து நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிடம் பாஜக நிதியை கொடுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய பாஜக அரசின் இந்த ஒரவஞ்சனைக்கு தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள், மக்கள் என அனைவரும் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தர மறுத்து வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தர முடியும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இதனை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான வெளிப்படையாக தெரிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்துகொண்ட ஒன்றிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம் தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியும், நடப்பு கல்வி ஆண்டுக்கான நிதியையும் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டிற்கு நிதி நிலுவையில் இருப்பது நன்றாக தெரியும். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றால்தான் நிதி தரப்படும்" என்று பேசியுள்ளார்.
ஒன்றிய அமைச்சர் இவ்வாறாக வெளிப்படையாக ஆணவத்துடன் பேசியுள்ளது தற்போது கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு பகிர்ந்தளித்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேரறிஞர் அண்ணாவின் வரிகளை கொண்டு ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
" இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். "
- பேரறிஞர் அண்ணா
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!