Politics

டெல்லியில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் : ராகுல் காந்தி பங்கேற்கிறார்!

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை (பிப்.6) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளினால் கட்டமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கும் வரையறைகளை உள்ளடக்கிய யுஜிசி வரைவு நெறிமுறைகள், மாநில அரசின் உரிமை பறிப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இதனை எதிர்த்து தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதற்கென தமிழ்நாடு சட்டப்பேரவையில், யுஜிசி வரைவு விதிமுறைகளை திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடல் மாடல் அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றியது.

எனினும், இதற்கு பதிலளிக்காமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து, தி.மு.க மாணவரணி சார்பில் நாளை டெல்லியில் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இப்போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மற்றும் தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

தி.மு.க தலைமையில் தேசிய தலைமைகள் ஒருங்கிணைந்து டெல்லியில் முற்றுகையிடுவது, ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு கடும் நெருக்கடியாக அமைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: தமிழ்நாட்டில் புதிய ஜவுளிப் பூங்காக்களை திறக்கப்போவது எப்போது? : மக்களவையில் தி.மு.க MP கேள்வி!