Politics

இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற RSS தலைவர் கைது செய்யப்படவேண்டும் -முத்தரசன் !

இலக்கிய பேராசான் ப. ஜீவானந்தம் அவர்களின் 62 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள ஜீவா பூங்காவில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாட்டு மக்களுக்காக போராடி பல்லாயிரம் பேர் சிறை சென்று சிறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி,1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெறப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் நாட்டுக்கு ராமர் கோவில் திறக்கப்பட்ட தினம் தான் சுதந்திரம் என்று பேசியது மிக மிக கண்டிக்கத்தக்கது. பாஜக இல்லாமல் வேறு அரசு இருந்திருந்தால், மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார். அவரின் கருத்துக்காக அவர் கைது செய்யப்பட வேண்டும். இதைக்காட்டிலும் வேறு ஆபத்தம் இருக்க முடியாது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எல்லாம் முயற்சியும் மேற்கொண்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு கழகத்தை உண்டாக்கும் முயற்சியும் மேற்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிந்தும், அவர் எப்படி பதவியில் நீடிக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவர் பதவி காலம் முடிந்தும், அதே பதவியில் நீடிக்கிறார் என்றால் அது அதிசயம், உலக அதிசயத்தில் இது ஒரு அதிசயம்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வேண்ட தகாத விரும்பத்தகாத கருத்துக்களை கூறி தன் பெயரும் படமும் பரபரப்பாக செய்தியாக வெளியிடப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை தரித்து, மரியாதை செய்கிறார். திருவள்ளுவர் மதம் சார்ந்தவர் அல்ல. திருக்குறள்பொதுமுறை என்று போற்றப்படுகிறது. திருவள்ளுவரை அசிங்கப்படுத்தும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை உள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கும்போது திமுக தான் ஆட்சியில் இருக்கும். அப்போதும் எதிர்கட்சிகள் தேர்தலில் பங்கேற்காமல் இருப்பார்களா? தமிழ்நாடு அரசு தங்களிடம் உள்ள நிதியை வைத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்புநிலையை காட்டிக்கொள்ள அரசை விமர்சிக்கிறார்கள்"என்று கூறியுள்ளார்.

Also Read: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு !