Politics
CPIM புதிய மாநில செயலாளர் சண்முகத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து : யார் இந்த சண்முகம்... முழு விவரம் உள்ளே !
விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் புதிய 81 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்களின் பதவி காலம் நிறைவு பெற்றது தொடர்ந்து புதிய மாநில செயலாளராக திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1979 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்த சண்முகம் அப்போதிருந்தே தீவிர மாணவர் அரசியலில் ஈடுபட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர், செயலாளர் என முன்னணி பொறுப்புகளில் இருந்த அவர், 1992 ஆம் ஆண்டு உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக தேர்வானார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் பதிவான ஒப்பற்ற வாச்சாத்தி போராட்டத்தை 30 ஆண்டுகள் வழிநடத்தி வென்று காட்டிய முன்னணி தலைவர்களில் ஒருவரான சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள் செயல்பட்டார்.
சி.பி.ஐ(எம்) மத்திய குழு உறுப்பினராக இருந்த தோழர் பெ.சண்முகம் இன்று, விழுப்புரத்தில் நடந்து முடிந்த 24 வது மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சண்முகத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் சி.பி.ஐ(எம்) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே. பாலகிருஷ்ணன்என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!