விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 3ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு நடைபெற்றது.
இன்று மாநிலக் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் புதிய 81 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்களின் பதவி காலம் நிறைவு பெற்றது தொடர்ந்து புதிய மாநில செயலாளராக திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புதிதாக மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநிலமாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் உழைக்கும் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாநிலம் முழுவதுமிருந்து வந்திருந்த முக்கிய பிரமுகர்களுடன் விவாதித்து பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் செயல்படுத்தும் வகையில் அடுத்தடுத்து அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும். மக்கள் விரோத நடவடிக்கைகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. திமுகவுடன் இணைந்து மதவாத ஒன்றிய பாஜக அரசை எதிர்ப்போம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத வெறி சக்திகளை எதிர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.