Politics
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலம்! : சிக்கிக்கொண்டாரா எடப்பாடி?
ஃபெஞ்சல் புயல், மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அடுத்து இரு நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (டிசம்பர் 9) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தில், முரசொலி செல்வம், ரத்தன் டாடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியகருப்பன், செந்தில் பாலாஜி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்து விடையளித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித்தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா முன்மொழியப்பட்ட போது தி.மு.க அதை எதிர்க்கவில்லை என பேசினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நானும் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார் என்று அமைதியாக இருந்தேன். நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும்போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எதையும் தெரியாமல், தவறான தகவலை அவையில் பதிவு செய்யக்கூடாது. எங்களின் ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் தங்களுக்கு காட்டப்படவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு, “நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியிருப்பீர்கள். அதில் ஒன்றாவது எங்களிடம் கொடுத்திருப்பீர்களா? ஒரு மாநில முதலமைச்சர் ஒன்றிய பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தை உங்களுக்கும் அனுப்ப வேண்டுமா?” என அமைச்சர் துரைமுருகன் பதில் மொழி உரைத்தார்.
இதனையடுத்து, தி.மு.க மீது எடப்பாடி வைத்த குற்றச்சாட்டு அ.தி.மு.க.விற்கே அடியாக மாறியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, ஒன்றிய அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தார். ஆனால், அதற்கு மாற்றாக சட்டப்பேரவையில் எடப்பாடியார் பேசியுள்ளார்.
இதனால், கட்சியின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமியார் தவறான தகவல்களை கையாண்டு வருகிறார் என்கிற அதிருப்தியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!