Politics
மதுரை டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு எதிர்ப்பு : தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியுள்ள நிலையில், மதுரை நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசின் சார்பில் மூத்த அமைச்சர் துரைமுருகன் இந்த அறிக்கையை முன்மொழிந்தார்.
அதன் விவரம் :
"மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்தச் சூழ்நிலையில், மதுரை மாவட்டம், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக இரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச்சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது"என்று கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரவு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!