Politics
தேர்தல் பத்திர முறைகேடு : பாஜகவின் ஊழல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் !
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யார் யார் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது குறித்த விவரத்தையும் SBI வெளியிட்டது. இதன் மூலம் கார்பரேட் நிறுவனங்களை மிரட்டி அதனிடமிருந்து நிதி வசூல் செய்த பாஜகவின் ஊழல் வெளிவந்தது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கு நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் ஏல நடைமுறையின்றி ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ,தேர்தல் பத்திர முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் எஸ்.ஐ.டி குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆயிரம் கோடி நன்கொடை வழங்கியபோதும் அதனை விட 100 மடங்கு அளவுக்கு லாபம் அடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும் லாபம் அடைந்துள்ளதாகவும், இந்த முறைகேட்டில் பொது வாழ்வில் உள்ளவர்களும், அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் எஸ்.ஐ.டி குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் நன்கொடை ஊழலில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!