Politics
"தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் SBI வங்கி வெளியிட வேண்டும்"- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
ஆனால், இந்த விவரங்களில் எந்த கட்சி யாரிடமிருந்து நன்கொடை பெற்றது என்ற விவரங்கள் இடம்பெறவில்லை. மாறாக யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்ற பட்டியலும், எந்த அரசியல் கட்சி எவ்வளவு தொகையை பெற்றது என்பது குறித்த விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து விவரங்களையும் SBI வங்கி வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பத்திரங்களின் ஆல்பா நியூமரிக் எண்களை SBI ஏன் வெளியிடவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து "SBI வங்கியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்காக SBI வங்கி வாதாட வேண்டிய தேவையில்லை, அது நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், "தேர்தல் பத்திரங்களின் ஆல்பா நியூமரிக் எண்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் SBI வங்கி வெளியிட வேண்டும். அதனை வெளியிட்ட பிறகு 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். SBI தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!