Politics

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்பட்ட CAA : பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை திசைதிருப்ப முயற்சி !

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம், பாஜக ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகளும் (2022 வரை) பாஜக மட்டும் சுமார் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்த நிதியிலிருந்து 58% ஆகும். எனவே தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும், நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது SBI தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 15-ம் தேதி மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன் விவரங்கள் வெளியானால் அது பாஜக பல்வேறு ஊழல்வாதிகளிடம், கார்பரேட் அதிபர்களிடம் பணம் வாங்கியது உறுதியாகும் என்பதால் நாளை SBI வங்கி வெளியிடப்போகும் தகவல்கள் குறித்த எதிர்பார்ப்பு நடுமுழுவதும் எழுந்தது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA ) தற்போது அரசிதழில் வெளியிட்டு அதனை ஒன்றிய பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. ஆனால், தேர்தல் பத்திர விவகாரம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அதில் இருந்து ஊடகத்தினரையும், பொதுமக்களையும் திசை திருப்ப ஒன்றிய பாஜக அரசு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Also Read: வலுவடையும் இந்தியா கூட்டணி... சிதறும் பாஜக கூட்டணி : நாடு முழுவதும் மோடிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு !