Politics

மஹாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு : கலக்கத்தில் பாஜக !

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்திலும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை ஓரணியில் நின்று எதிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில், அந்த மாநில சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஹரியானா, கோவா போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் உடன்பாடு முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார் போன்ற இடங்களிலும் கூட்டணி உடன்பாடு இறுதிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது பெரிய மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தேர்தல் உடன்பாடு நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தியா கூட்டணியில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர சிறிய கட்சிகளுக்கு 3 கட்சிகளுமே தங்களது தொகுதிகளை பங்கிட்டு தருவது எனவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியா கூட்டணி பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக தங்கள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உ.பி-க்கு ரூ.25,495 கோடி... தென்மாநிலங்களுக்கு வெறும் ரூ.22,455 கோடி: ஒன்றிய அரசின் செயலால் அதிர்ச்சி !