Politics

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை- இந்த திட்டமே பா.ஜ.க.வின் தேர்தல் நிதிக்காக உருவாக்கப்பட்டதுதான் !

2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தேர்தல் பத்திரங்கள் சட்டம். அப்போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக அந்த தேர்தல் பத்திரம் (Electoral bond) முறையை எதிர்த்தனர்.

ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (SBI) வங்கி வழியாக, உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியினை வழங்கும் முறை தேர்தல் பத்திரம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் நிதி வழங்குவோரின் பெயர்கள் மற்றும் விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. மேலும், நிதி வழங்குகிறவர்கள் ரூ. 1000, ரூ.10,000 அல்லது ரூ. 1 கோடி என எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வழங்கலாம் என்று தேர்தல் பத்திர திட்ட வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது

2017 ஆம் ஆண்டே தேர்தல் பத்திர மசோதா நிறைவேற்றப்பட்டாலும், 2018 ஆம் ஆண்டு முதல் தான், நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் (2017 - 18 முதல் 2021 - 22), தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் பெற்ற நிதி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, தேசிய அளவில் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை ரூ.9,187 கோடி. அதில் ரூ. 5271 கோடி நிதி, பா.ஜ.க விற்கு மட்டும் தரப்பட்ட நிதியாகும். இந்த தொகை, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகள் பெற்ற நிதிகளை விடவும் அதிகமாகும்.

இவ்வளவு தொகை பா.ஜ.க விற்கு கிடைப்பதற்கு காரணம், தனியார் நிறுவனங்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசால் செய்து தரப்படும் அதிகார உதவிகளே என கணிக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில், பா.ஜ.க வின் 2014 மக்களவை தேர்தல் செலவுகளில் பெரும் பங்கு வகித்த,* ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2014 இல் ரூ1.67 லட்சம் கோடியாக இருந்த அம்பானியின் சொத்து, 2022 நிலவரப்படி, ரூ. 8.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.*

நிறுவனங்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டால் தாங்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஆதரவானவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடும் என்று அஞ்சியே இப்படி ஒரு வரயரையே சேர்த்தார்கள்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சிகள் முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்கள்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “தேர்தல் பத்திரம் என்பதே அரசியல்சட்ட அமைப்புக்கு முரணானது” என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், இதுவரை, நிதி வழங்கியவர்கள் விவரம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அரசு அம்பானி- அதானிகளுக்கான அரசு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த தீர்ப்பின் கருத்துகள் அமைந்திருக்கிறது.

அந்த தீர்ப்பில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடைகள், அரசியலில் நிறுவனங்களின் ஆதிக்கத்தை உருவாக்கும். நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகளில் இருப்பது வணிக நோக்கம் மட்டும்தான் என்று மிகத் தெளிவாக கூறி இருக்கிறது.

நரேந்திர மோடியின் ஊழல் நிறைந்த கொள்கைகள் மீண்டும் உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் மற்றும் கமிஷன் பெறும் வழியாக தேர்தல் பத்திரங்களை பாஜக பயன்படுத்தியது. இன்று அது நிரூபணம் ஆகியிருக்கிறது.

மீண்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது பாஜக முகமூடி என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார்

பா.ஜ.க. கடந்த 6 வருடங்களாக உச்சநீதிமன்ற கூற்றுபடி அரசியலமைப்புக்கு முரணான ஒரு திட்டத்தின் பல ஆயிரம் கோடிகளை நன்கொடையாக பெற்று அதனைக் கொண்டு பல தேர்தல்களில் வெற்றியும் பெற்றிருக்கிறது பா.ஜ.க. உண்மையில் பார்த்தால் அந்த வெற்றிகளும் போலொயானது தான்.