Politics
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் என்ன ?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949-ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.
மேலும், சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவரின் அனுமதியோடு அது நிறைவேறியது. அதோடு நிற்காமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒன்றிய அரசு அறிவித்தது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்வின் முழு விவரம் : "குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மாநிலம் இருக்கும்போது ஒன்றிய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் சட்ட ரீதியாக எதிர்க்க முடியாது. அது குழப்பத்திற்கு வழி வகுக்கும். குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருக்கும் போது ஒன்றிய அரசு மாநில அரசு சார்பான முடிவுகளை எடுக்கலாம்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய ஒன்றியத்தில் இணைந்த பிறகு சுதந்திர இறையாண்மை இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியா ஒன்றியத்தில் இணைந்ததன் மூலம் அதன் முழு இறையாண்மையை ஒப்படைத்து விட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி இறையாண்மை இல்லை. அதன் அரசியல் அமைப்பு இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது. 370 சிறப்பு அதிகாரம் தற்காலிகமானது நிரந்தரமானது அல்ல. பிரிவு 370 ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே இருந்தது. 370 பிரிவை ரத்து செய்வதற்கு முன் மாநில சட்டமன்றத்தின் பரிந்துரை தேவையில்லை. இதனால் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும். அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து விதிகளையும் குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயன்படுத்திருக்கலாம். மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலை அதற்காக பெறவேண்டிய தேவை இல்லை.
மாநிலத்தின் பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜனநாயக முறையில் அங்கு ஆட்சி அமைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாநிலத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது செல்லும்" என நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!