Politics

IPC சட்டங்களை மாற்றும் பாஜக அரசின் மசோதா : நாடாளுமன்ற குழுவின் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு !

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர்.

இதனிடையே கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பாஜக பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்தது. அதில் ஒரு பகுதியாக இந்தியா என்ற பெயரை மாற்றும் விதமாக சட்டங்களின் பெயரில் இருந்த இந்தியா என்ற பெயரை நீக்கி பாரத் என பெயர் சூட்ட பாஜக முடிவு செய்தது.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை ஒன்றிய பாஜக அரசு மாற்றி, அதற்கு பதில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா என்ற பெயர்களை சூட்டுவதற்கான மசோதாக்களை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு வந்தது. அப்போது திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக அந்த மசோதா நாடாளுமன்ற குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பொய்... பொய்... பொய்... ஆளுநர் மாளிகையின் குட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை !