Politics

ஹரியானா : நின்றுபோன யாத்திரையை மீண்டும் தொடரவுள்ளதாக இந்துத்துவ அமைப்புகள் அறிவிப்பு.. தொடரும் பதற்றம் !

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலும் வன்முறை வெடித்துள்ளது. இந்த மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான் நடந்து வருகிறது. ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும், அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பேரணியை ஜூலை 31 அன்று நடத்தினர்.

இந்த பேரணியில் வந்தவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புக் கோஷங்களை எழுப்பியபடியே சென்றுள்ளனர். இவர்களது பேரணி குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில் வந்தபோது, சிலர் தடுத்துள்ளனர். இதையே தங்களுக்குக் கிடைத்த கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உடனடியாக மத வன்முறையில் இறங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மக்களை அடித்து துன்புறுத்தியதோடு வாகனங்கள், கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 2 ஊர்காவல் படையினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதில் மசூதியில் இருந்த இமாம் ஒருவரும் இந்துத்துவ கும்பலால் கொல்லப்பட்டார்.

இந்த கலவரம் தொடர்ந்து சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை உ.பி அரசை போன்று புல்டோசர் வைத்து ஹரியானா பாஜக அரசும் இடித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து 'இன அழிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட மகா பஞ்சாயத்துகளில் மதமோதலை வெளிப்படையாக தூண்டும் வெறுப்பு கருத்துகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், வன்முறையால் நின்று போன யாத்திரையை மீண்டும் ஆக.28 தொடர முடிவெடுக்கப்பட்டிருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த யாத்திரைக்கு போலிஸார் தரப்பில் அனுமதி கிடைக்கவில்லை என்றும், யாத்திரை நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். எனினும் அரசின் ஆதரவோடு இந்த யாத்திரையை தொடர இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சர்ச்சைக்கு இடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட நூ பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகள் நிறுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Also Read: “ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை..?” : பஞ்சாப் அரசுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் பன்வாரிலால் புரோஹித் !