Politics

நாடாளுமன்றம் செல்வதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள்; பிரதமர் ஏன் அவைக்கு வருவதில்லை?: டி.ஆர்.பாலு MP!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி இன்று மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. இன்றும் நாளையும் விவாதம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடி பதில் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய கூட்டணி எம்.பி.க்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், "மணிப்பூர் வன்முறையில்143 பேர் உயிரிழந்துள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர். இரண்டு பெண்கள் நிர்வாணமாக வீதியில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவ்வளவு கொடூரங்கள் நடந்தும் பிரதமர் மோடி மவுனமாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கும் வருவதில்லை. மணிப்பூர் மாநிலத்திற்கும் செல்லவில்லை.

பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்தது நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான். ஏன் பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை? எதன் அடிப்படையில் அவர் நாடாளுமன்றம் வர மறுக்கிறார்?. பா.ஜ.க வினர் மக்கள் பிரதிநிதிகளின் மன்றங்களைத் தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். தமிழ் நாடு சட்டப்பேரவையிலும் தேசிய கீதிம் ஒலிப்பதற்கு முன்பே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியே சென்றார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்.

மிக உன்னத திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை தற்போது வரை முடக்கிவைத்திருக்கிறது மோடி அரசு. சோனியா காந்தி, மன்மோகன் சிங், கலைஞர் ஆகியோரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே முடக்கப்பட்டது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நிபந்தனைகளை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

இதனைக் கருத்தில் கொள்ளாமல் இலங்கைக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பா.ஜ.க ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. 5 லட்சம் வேலைவாய்ப்புகளைப் பிரதமர் மோடி ஒழித்துவிட்டார். மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு பா.ஜ.க ஆட்சியில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் எனக் கூறினார். ஆனால், யாருக்கும் வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி இதுவரை நிறைவேற்றவில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூரை இரண்டாக பிரித்து விட்ட பாஜக.. மக்களவையில் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!