Politics

"மணிப்பூர் வன்முறைக்கு பாஜக முதல்வர்தான் முக்கிய காரணம் " -வெளிப்படையாக குற்றம்சாட்டிய பாஜக MLA !

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து. இந்த நிலையில், சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

மோரே நகரில் குக்கி குழுவினரை இலக்கு வைத்து மைத்தேயி இனத்தவர் தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி குக்கி பழங்குடி மக்கள் தங்கள் இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த வன்முறையியில் 60 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வன்முறைக்கு மணிப்பூரில் பாஜக முதல்வர்தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏவே குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி வயர் இணையதளத்துக்கு பேட்டியளித்த சைகோட் தொகுதி பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹவோ "மணிப்பூர் காவல் துறையினர் குக்கிகளுக்கு எதிராக களமிறங்கி, இன அழிப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர். எல்லாவற்றையும் திறமையற்ற முறையில் கையாளுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மணிப்பூர் அரசாங்கம் செயல்பட்டு வருவதால் முதல்வர் பைரன் சிங் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், " முதல்வர் பைரன் சிங் குக்கி இன மக்களுக்கு எதிரானவர். அவரது ஆட்சியில் குக்கி இன மக்கள் எந்தப் பேச்சுக்களையும் ஏற்க வாய்ப்பில்லை. குக்கி இன மக்களை அழிக்க மெய்டெதேய் இன கலவரக்காரர்களுக்கு அரசுப் படைகள் வெளிப்படையாக உதவி செய்வதாகத் தெரிகிறது. இந்த கலவரத்துக்கு காரணமே முதல்வர் பைரன் சிங்தான்" என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: 78 இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றிய சாமியார்.. இந்து இளைஞர்களுடன் நடந்த திருமணம்.. வெளிவந்த ’Real UP Story’!