Politics

ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்கள்.. ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அதிரடி காட்டிய டெல்லி அரசு!

டெல்லியில் 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்தே டெல்லி அரசின் முடிவுகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

மேலும் 2019ம் ஆண்டு டெல்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என நீதிபதி பூசன் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து ஒன்றிய அரசின் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கி இருப்பது டெல்லி அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. நீதிபதிகளின் தீர்ப்பில்,"2019ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சட்டப்பேரவைகளில் சட்டம் நிறைவேற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சியின்படியே இயங்குகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம். ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களில் மட்டுமே ஒன்றிய அரசு தலையிடும் அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவைச் செயல்படுத்துவதைத் தடுத்தால் கூட்டுப் பொறுப்பு பாதிக்கப்படும்.

சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ள சில அம்சங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு டெல்லி அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக அதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான நிலுவை விண்ணப்பங்களுக்கான ஒப்புதலை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு தராத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு ஒன்றிய அரசு மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட மனுவில், "டெல்லி அரசின் கடிதத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இது நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முட்டுக் கட்டை போடுவதைப் போல இருக்கிறது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மற்றும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே டெல்லி அரசு பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ”அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்”.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்!