Politics

ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக.. -பிற மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஆளுநர் ஆன்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இருந்த நிலையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி 10.4.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும் அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருப்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா’ உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

​இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, அது சம்பந்தமாக 10-4-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் இத்துடன் தனது கடித்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என தாம் நம்புவதாகவும், அவர்களது மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: கூட்டுறவு வங்கிகளில் ரூ.1000 கோடி அளவு மோசடி.. சிக்கும் பாஜக தலைகள்.. பரபரப்பில் கர்நாடக அரசியல் !