Politics

கர்நாடகத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைப் பிடிக்கும்.. வெளியான புதிய கருத்து கணிப்பு !

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அங்கு இந்த ஆண்டோடு சட்டமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதத்தோடு முடிவுக்குவரும் நிலையில், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளில் பாஜக படுதோல்வியை சந்தித்து காங்கிரஸ் கட்சி அங்கு அதிக இடத்தில் வெற்றிபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் பெறும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

LokPoll என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. LokPol கருத்துக் கணிப்பின்படி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 116 முதல் 122 இடங்களை கைப்பற்றும் என்றும், 39 முதல் 42 சதவீத வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜகவுக்கு 77 முதல் 83 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அக்கட்சி 33 முதல் 36 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 15 முதல் 18 சதவீத வாக்குகளுடன் 21 முதல் 27 இடங்களை கைப்பற்றும் என்றும், மற்றவர்கள் 6 முதல் 9 சதவீத வாக்குகளுடன் 1 முதல் 4 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்றும் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. இந்த தகவல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read: "இது எங்கள் நிலம்.. நாங்கள் ஏன் இந்தியில் பேசவேண்டும் ?" - இணையத்தில் வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதிலடி !