Politics

“வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் இல்ல”-யாரை சாடுகிறார் ஆந்திர முதல்வர்?

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆளுங்கட்சிக்கு எதிராக 'இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)' என்று சாலை பேரணி நடத்தினார்.

அப்போது நெல்லூர் மாவட்டத்தில் கந்துகூர் நகரில் உரையாற்ற இருந்த இவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் குவிந்தன. இந்த கூட்டத்தின் நெரிசலில் வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைந்து, அதனுள் விழுந்த தொண்டர்களில் 8 பேர் உயிரிழந்தனர். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள நர்சிப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "கந்துகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 8 பேர் உயிரிழந்ததற்கு சந்திரபாபு நாயுடுவின் பப்ளிசிட்டி வெறியே காரணம்.

இச்சம்பவத்துக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரபாபு நாயுடு தனது அரசியல் ஆதாயங்களுக்காக எட்டு பேரைக் கொன்றது மிகவும் கேவலமானது, வெட்கக்கேடானது.

போட்டோ ஷூட்டுக்காக, ட்ரோன் ஷாட்டுக்காக, சில பேர் இருந்தாலும், பெரிய எண்ணிக்கையைக் காட்டுவதற்காக மக்களை குறுகிய பாதையில் தள்ளினார்கள். அவர்கள் தங்கள் வாகனத்தை பேரிகார்டு போல் பயன்படுத்தி எட்டு பேரை கொன்றனர்.. இதைவிட கொடுமை வேறு ஏதாவது இருக்குமா?

மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல அரசியல். சினிமாவில் இருப்பதுபோல ஷூட்டிங் நடத்துவது கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல.

2015ல் நடந்த கோதாவரி புஷ்கரலுவின் போது, ​​29 பேர் பலியானதற்கும் சந்திரபாபு நாயுடுதான் காரணம். ஆகவே இது அவருக்கு புதிதல்ல, அவர் தனது விளம்பரத்தில் மட்டுமே அக்கறை காட்டுகிறார். 8 அப்பாவிகளின் மரணத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்காமல், பொதுமக்கள் மீது பழியைப் போட்டார்.

அரசியல் என்பது படப்பிடிப்போ, நாடகமோ இல்லை ஆட்சியை மாற்றுவதும், நமது சுகாதார அமைப்பை மாற்றுவதும், மக்களைச் சென்றடைவதுமே அரசியல்" என்றார்.

Also Read: #REALHEROES : விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. யோசிக்காமல் காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு !