Politics

“ஆபாச ஆடியோ விவகாரம் : பின்னணியில் அண்ணாமலை - களங்கப்பட்டுக்கிடக்கும் கமலாலயம்”: சிலந்தி சிறப்பு கட்டுரை!

அண்ணாமலை நடவடிக்கைகளால் களங்கப்பட்டுக்கிடக்கும் கமலாலயம்!

நாராச பேச்சு என்பதா? நரகல் என்பதா? சாக்கடை மொழி என்பதா? ஆபச அச்சனை என்பதா? வலைதளங்களில் வலம் வரும் அந்த வீடியோவைக் கண்டு முகம் சுளிக்காதவர்கள் இருக்க முடியாது! அந்தத் தரக்குறைவான தாக்குதலை நடத்திக் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்க்கட்சியினர் அல்ல. இருவருமே ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்!

முடைநாற்றம் மூக்கைத் துளைத்த அந்தப் பேச்சை நடத்திய இருவருமே 'கமலாலயத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள்! அண்ணாமலை கமலாலயத்தில் குடிபுகுந்ததிலிருந்து இத்தகைய ஆபாச நடவடிக்கைகள் குறித்து வரும் தகவல்கள் எல்லாமே தொடர்கதைகளாகி வருகின்றன!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கான குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை என்பதை யாராலும் மறுத்திட இயலாது! தேர்தல் களத்தில் தனித்து நின்றால் அதன் வாக்கு வலிமை நோட்டாவுக்கும் குறைவானது என்பதை அனைவரும் அறிவர்! இருந்தபோதிலும் அதன் தலைவர்களாக விளங்கியவர்கள்.

குறிப்பாக இல.கணேசன். ஜனா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் கருத்துக்கு ஒரு மதிப்பும், மரியாதையும் இருந்து வந்தது! அத்தனையும் சமீபகாலமாக சின்னாபின்னமாகி சிதறுண்டு போய்க்கிடக்கிறது?

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிய பல பண்பாளர்கள் அந்தக் கட்சியின் அலுவலகத்துக்கே வருவதை தவிர்த்துவிட்ட நிலையில், அங்கு பல அருவருக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறத் தொடங்கிவிட்டன! அண்ணாமலை எனும் ஒரு அரைக்கால் வேக்காட்டு அரசியல்வாதியை தலைவராக நியமித்த சில நாட்களிலே வெடித்தது; இராகவன் எனும் அந்தக் கட்சியின் பொறுப்பாளர் குறித்து வெளியே பரவிய வீடியோ!

அந்த வீடியோ கூட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வினை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிட்டது அல்ல: பா.ஜ.க.வினைச் சேர்ந்த ஒருவரே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பார்வைக்குக் கொண்டு சென்று விட்டு, அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வெகுண்டு வெளியிட்ட வீடியோ! கட்சிக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாதே. களங்கம் உருவாகிவிடக் கூடாதே என்று அந்தக் கட்சியின் தலைவர் நினைத்திருந்தால், அந்த வீடியோ வெளிவராமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்!

ஏன் அவர் அப்படிச் செய்யவில்லை என்ற கேள்வி பல மூத்த பி.ஜே.பி. தலைவர்களிடமும் எழுந்து நிற்கும் கேள்வி! அண்ணாமலைக்கு உண்மையில் கட்சி விசுவாசமிருந்திருந்தால், வீடியோவை வெளியிடுவேன் என்று கூறிய மதன் ரவிச்சந்திரனை சமாதானப் படுத்தி, தவறு செய்த ராகவனை அழைத் துக் கண்டித்து இருக்க வேண்டும். அவரால் அது இயலாது என்றால், ராகவனின் செயல் குறித்து மேலிடத்துக்குத் தகவல் தந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி - மதன் ரவிச்சந்திரனை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்!

அண்ணாமலை அப்படி எல்லாம் செய்யவில்லை: ஏனென்றால். திடீர் சாம்பார், திடீர் இட்லி', போன்று பா.ஜ.கட்சிக்கு திடீர் தலைவர் ஆனவர்! அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு அதுபோன்ற செய்திகள் எவ்வளவு தடையாக இருக்கும் என்று எண்ணவில்லை!

அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்பவரும் அப்போது பா.ஜ.க.வில் இருந்தவர்தான்! அவர் அண்ணாமலையைச் சந்தித்து, இது போன்று பி.ஜே.பி.யின் தலைவர்கள் 15 பேருக்கு எதிரான வீடியோக்கள் இருக்கின்றன எனத்தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையை, மதன் ரவிச்சந்திரன் இரண்டு முறை சந்தித்து, தன்னிடம் ராகவன் குறித்த தகவல்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்து ராகவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை மறுக்கவில்லை. அது உண்மைதான் என்பதையும் அவரே ஒத்துக்கொண்டுள்ளார். மதன் ரவிச்சந்திரன் தன்னிடம் ராகவன் குறித்த ஆதாரமான வீடியோ உள்ளது என்று கூறியபோது, வெளியிட்டுக்கொள் என்று - கூறியதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன் பின்தான் அந்த வீடியோ வெளிவந்து, அதனை ராகவன் மறுத்து, பின்னர் அண்ணாமலையைச் சந்தித்து பி.ஜே.பி.யில் தான் வகித்த எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார். அந்த வீடியோ குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்; தர்மம் வெல்லும் - என்றெல்லாம் அறிக்கை விட்டுவிட்டு ஒதுங்கி விட்டார்.

ராகவன் குறித்த இந்த வீடியோ வெளிவந்த உடன், 'ராகவன் செய்வதறியாது கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகினார். வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் பி.ஜே.பி.யிலிருந்து வெளியேற்றப்பட்டார்.' அதன் பிறகு, மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல், பி.ஜே.பி.யில் உள்ள பலரையும் அதிர வைத்த தகவல். ராகவன் குறித்தும், அவரது அசிங்கமான பாலியல் நடவடிக்கை குறித்தும் தான் வெளியிட்ட வீடியோவின் மூளையாக (Master mind) மூளையாக இருந்து செயல்பட்டவர் அண்ணாமலை என்றும், தான் வெறும் வெளியீட்டாளர் எனவும் கூறியதுதான்!

பலருக்கும் மறந்துவிட்ட மேற்கண்ட நிகழ்வுகளை நினைவுபடுத்திவிட்டு இன்றைய கமலாலயத்தினுள் நுழைவோம்!

அங்கே காலம்காலமாக உணர்வுபூர்வமாக பி.ஜே.பி.க்கு பணியாற்றிய பலரைக் காண முடியவில்லை! அவர்களில் சிலர் வருவதில்லை; இன்னும் சிலர் அங்கு நடைபெறும் அருவருக்கத்தக்க செயல்கள் கண்டு அந்த இடத்துக்கு செல்வதில்லை! வேதனையில் வெந்துகொண்டு பலர் வெளியே சொல்லாமல் இருந்தாலும், சமீபத்தில் வலைதளங்களில் 'வைரலாக வரும் ஆடியோ பேச்சைக் கேட்டு தங்களது மனவேதனைகளை வெளியே கொட்டி தீர்க்கத் தொடங்கியுள்ளனர்.

சன் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பெரியவர் இராம.சுப்பிரமணியம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தன்னைப் போன்றவர்கள் பெரிதும் பற்று கொண்டிருந்த பா.ஜ.க.வின் இன்றைய நிலை குறித்து குமுறினார்! ஆம்; கமலாலயம் இன்று குண்டர்களின் ஆலயமாக காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது; கயவர்களின் புகலிடமாகிவிட்டது; நரகல் நடைப் பேச்சாளர்களின் பயிற்சிக் கூடமாகிவிட்டது. இன்று 'வைரலாக வெளிவந்துள்ள ஆடியோவில், கமலால்யத்து முக்கிய பொறுப்பில் உள்ள இருவர். ஆபாசமாகக் கூட அல்ல; கேட்கக் கூசிடும் அளவில் 'வண்டை வண்டையாக' பேசி வெளி வந்துள்ள ஆடியோ அதற்கு அத்தாட்சியாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.கழகப் பேச்சாளர் ஒருவர் பா.ஜ.க.பெண் பேச்சாளர்கள் குறித்துப் பேசும் போது, வார்த்தை விளையாட்டு என எண்ணி உபயோகித்த வார்த்தைகளின் உள் அர்த்தத்தை உணராதோ, உணர்ந்தோ பேசிய பேச்சு அந்தக் கட்சியில் உள்ளவர்களுக்கு மனவருத்தம் அளித்த நிலையில், அதற்கு உடனடியாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ஒரு பெண்ணாகவும், சக மனிதராகவும், இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும் அதனை ஏற்க இயலாது என வெளிப்படையாக வேதனை கலந்த வருத்தத்தைத் தெரிவித்தார்; தன் பேச்சுக்கு அந்தப் பேச் சாளர் மன்னிப்பு கேட்ட நிலையிலும், அப்படி பேசியவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்ற போதிலும்,கண்ணியக் குறைவாகப் பேசிய அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கழகத்தின் பெருந்தன்மையைப் பாராட்டாவிடினும். அதிலே அரசியல் லாபம் தேட நினைத்துபா.ஜ.க. மகளிர் அணியைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தச் செய்தார் அந்தக் கட்சியின் அரைக்கால் வேக்காட்டு தலைவர்! எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஜோக் என்னவென்றால், தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை; காரணம் தி.மு.க. கட்சியினர் ஆபாசமாக பெண்களைப் பேசுகின்றனர்! என்று முழங்கினார்.

அந்தத் தலைவர் இன்று ஆபாசாக்' களஞ்சியமாக கேட்கக் கூசிடும் வார்த்தை பேசிடும் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? அன்று மதன் ரவிச்சந்திரன் கூறியதுபோல இதன் பின்னணியில் அவர் இருக்கிறாரோ? என்ற அய்யம் பலர் மனதில் எழுந்தாலும் வியப்பில்லை!.

எது எப்படிலோ கட்சியை வளர்க்கப் போவதாகக் கூறி புறப்பட்ட அரைக்கால் வேக்காட்டு அரசியல் தலைவர்கள் கமலாலயத்தை அசிங்கப்படுத்திவிட்டனர்; எத்தனை புனித நீர் கொண்டு அதனைக் கழுவினாலும் அதன் துர்றாற்றம் அடங்கப்போவதில்லை! கமலாலயத்து உறுப்பினர்கள் என்று கூறிட வெட்கி வேதனைப்பட்டு கூனிக் குறுகிடும் நிலையை அந்தக் கட்சிப் பெண்களுக்கு உருவாக்கிவிட்டது இன்று உலாவந்து கொண்டிருக்கும் 'ஆடியோ!"

அண்ணாமலை தலைமையில் களங்கப்படுத்தப்பட்டுள்ள கமலாலயத்தை எத்தனை குடம் கங்கை நீர் ஊற்றி சுத்தப் படுத்த முயன்றாலும் அதனைச் செய்திட முடியுமா என்பது கேள்விக்குறியே!

- சிலந்தி

Also Read: "தமிழைப் பலிகடாவாக்க காசி தமிழ்ச் சங்கமம்; உங்கள் சூழ்ச்சியை தமிழ்நாடு சுக்குநூறாக்கும்": சிலந்தி தாக்கு