Politics

GST வரி விதிப்பு : கோவை மீது நேரடி தாக்குதல் - 4,000 நிறுவனங்கள் முடங்கும்.. எச்சரிக்கும் தினகரன் ஏடு!

கொரோனா பாதிப்பில் இருந்து தொழில்துறையும், பொதுமக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு தேவை தானா?.

எனவே இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என தினகரன் நாளிதழ் 3.7.2022 அன்று ‘இது தேவையா’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது வருமாறு:

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2000ம் ஆண்டில் ஜி.எஸ்.டி சட்டத்தை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. சட்டம் உருவாக 17 வருடங்கள் ஆனது. 2017ம் ஆண்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

2017 ஜூலை 1ம் தேதியன்று, ஜி.எஸ்.டி சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து வரி செலுத்தலை எளிமைப்படுத்துகிறோம் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியை அரசின் வருவாயை பெருக்குவதற்கான ஒரு சாதனமாக மோடி அரசு மாற்றிவிட்டது.

நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மக்களின் நிலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொருட்களுக்கான ஜ.எஸ்.டி வரி விகிதத்தை மாற்றியமைக்கிறோம் என்ற போர்வையில் அவ்வப்போது வரியை உயர்த்தி வருகிறார்கள். இதில், கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல். ஜூனில் ரூ.1.44 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை என்று மார்தட்டிக் கொள்கிறது ஒன்றிய அரசு.

இவ்வளவு வரி வசூலித்தால் மக்கள் தாங்குவார்களா? தொழில் துறையினரால் சமாளிக்க முடியுமா? அந்த மக்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு என்ன செய்தது என்பது பற்றி சிந்திக்காமல் ஜி.எஸ்.டி வரி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சண்டிகரில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள், எல்.இ.டி விளக்குகள், மின் விளக்குகள், பிரின்டிங் மை, பேனா மை, கத்தி, பிளேடு போன்ற பொருட்களுக்கு வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வணிக முத்திரையற்ற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதம் 5 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும், பம்ப் செட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டிருப்பது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால், வெட்கிரைண்டர், பம்ப்செட் உற்பத்தியின் தலைநகராக திகழ்வது கோவை தான். கோவையில் மட்டும் 100 பெரிய நிறுவனங்கள், 900 சிறிய நிறுவனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

அதேபோல், கோவையில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பம்ப்செட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பின் காரணமாக 4000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வரி உயர்வு ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும். கிரைண்டர்கள் மீதான வரி 18% ஆக உயர்த்தப்பட்டால், அதன் விற்பனை விலை கடுமையாக உயர்த்தப்பட வேண்டிய நிலை வரும்.

இந்த விலை உயர்வின் காரணமாக விற்பனை சரிவை சந்திக்கும். மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான வரி உயர்வும் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். பம்ப்செட்டுகளின் விலை உயர்வு தொழில்துறையை மட்டுமின்றி வேளாண்மை தொழிலையும் பாதிக்கும். கொரோனா பாதிப்பில் இருந்து தொழில் துறையும், பொதுமக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் இப்படி ஒரு வரி உயர்வு தேவைதானா? இந்த ஜி.எஸ்.டி வரி உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் ‘தமிழ்நாடு’: முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு!