Politics

”பண்டிகை கால கட்டுப்பாடுகளை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்”: பாஜக MLAக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய வினாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் பேசியதாவது,

விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தரவேண்டுமென்று ஒரு கோரிக்கையை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எடுத்து வைத்திருக்கிறார். நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல; இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் – ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.

Also Read: முன்னாள் முதல்வர்கள் படத்தை நீக்க வேண்டாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

கேரள மாநிலத்திலே, ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இன்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாகத் தடுக்கப்படவில்லை; அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது.

அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது; 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், பொது மக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலே கொண்டு, 15-9-2021 வரை அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் பொருந்தும்.

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தனி நபர்களைப் பொறுத்தவரையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

Also Read: “கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்டோரின் பிதாமகனாக திகழ்கிறார் முதல்வர்” - முரசொலி புகழாரம்