Politics

”PM Cares-ல் வெளிப்படைத்தன்மையே இல்லை” - ஒன்றிய அரசை சாடிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இணைந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தனர். அப்போது நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,

”ஜனநாயக நாட்டில் அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வெளிப்படைத்தன்மை. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகை மற்றும் அதை அரசாங்கம் பயன்படுத்தும் நோக்கம் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன் செயல்பட்டு வந்த இணையதளம் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்துள்ளது. மே 7ம் தேதிக்கு பின் வந்த நிவாரண தொகை அனைத்தையும் கொரோனா என்ற தனிப்பிரிவில் வைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 472 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 648 ரூபாய் வந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மேல் உள்ள நம்பிக்கையாலும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதால்தான் 2 மாதத்தில் இந்த நிவாரணத் தொகை வந்திருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அரசு நிதியில் இருந்தும் செலவிடப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு வைத்திருக்கும் PM CARES இணையதளத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 400 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு இ- பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் உள்ளது. அரசின் அனைத்து பணிகளும் 100% இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Also Read: விபத்தில் சிக்கி எலும்புமுறிவு.. இளைஞருக்கு முதலுதவி சிசிக்சை அளித்த தி.மு.க எம்.எல்.ஏ : மக்கள் பாராட்டு!