Politics

எப்போது உண்மை சொல்வார் முதல்வர்? : “பதில் வேண்டும் பழனிசாமி”- மக்களின் சார்பில் கேள்வி எழுப்பும் தி.மு.க!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில், கொரோனா காலத்திலும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளும் சீரழிந்துள்ள நிலையில், ஊழல் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அமைச்சர் பெருமக்கள்.

மக்கள் விரோதச் செயல்களையே முழுநேர வேலையாக கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும், முறைகேடுகளில் ஈடுபடுவதை நிறுத்தவில்லை இந்த அரசு.

இந்நிலையில், பல்வேறு விவகாரங்களிலும் அலட்சியப் போக்குடன் செயல்படும் அ.தி.மு.க அரசிடம் பொதுமக்கள் சார்பாக பல்வேறு கேள்விகளை தி.மு.க-வினர் ‘பதில் வேண்டும் பழனிசாமி’ என்ற ஹேஷ்டேகில் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து ட்விட்டரில் #பதில்_வேண்டும்_பழனிசாமி ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

‘பதில் வேண்டும் பழனிச்சாமி’ என்ற தலைப்பில் தி.மு.க மாநில சட்ட பிரிவு இணை செயலாளர் ஐ. பரந்தாமன், தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சரவணன், தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா ஆகியோர் காணொலிக்காட்சி வாயிலாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

ஐ.பரந்தாமன் பேசுகையில், “நோயின் தீவிரத்தை முன்பே உணர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்க மனமற்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஸ்டாலின் என்ன மருத்துவரா என்று கேலி பேசி, ஆலோசனைகளை புறந்தள்ளினார். ஆனால் பின்னர் அவரின் அறிவுறுத்தல்படியே சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சியாக அரசின் நிர்வாகத் தவறுகளை விமர்சித்து அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல் மக்களின் துயரத்தை போக்க ‘ஒன்றிணைவோம்

வா’ என்ற திட்டத்தின் மூலமாக மக்களுக்கு தேவையான உதவிகளை தி.மு.க., செய்தது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு மருந்து உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருட்களையும் லட்சக்கணக்கான மக்களுக்கு தி.மு.க., வழங்கி வருகிறது. அ.தி.மு.க அரசு ஆக்கப்பூர்வமாகச் செய்தது என்ன” எனக் கேள்வி எழுப்பினார்.

சரவணன் பேசுகையில், “நோய் பரவல் காலத்தில் அரசுக்கு ஆலோசனைகளை கூறினாலும், அதில் நல்ல திட்டங்களை ஏற்காமல் எதிர்க்கட்சித் தலைவர் என்ன மருத்துவரா? என்று முதலமைச்சர் கேலி பேசினார். உரிய முறையில் கொரோனாவை சென்னையில் தடுக்காமல், மாநிலம் முழுவதும் பரவவிட்டு, எண்ணிக்கையில் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். மாவட்ட வாரியான எண்ணிக்கையை கேட்டதற்கு இது வரை அரசு பதலளிக்கவில்லை.

ஊரடங்கால் மாநிலம் முழுவதும் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும்போது, அவர்களுக்கு நிவாரண உதவியாக 5,000 ரூபாய் கொடுக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தால், பணமில்லை என்று கூறிய எடப்பாடி அரசு, பல்வேறு சாலைப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் புதிய டெண்டர்கள் விடுகிறது.

அரசை எதிர்த்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை குறிவைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் சூழல் நிலவுகிறது. இதற்கு பழனிச்சாமி என்ன பதிலளிப்பார்?

மாநிலத்தில் பெருவாரியான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் மறுத்து வந்தார். தற்போது அவருடன் இருந்த அமைச்சர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எப்போது மாநில மக்களுக்கு எடப்பாடி உண்மையைக் கூறுவார்?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழன் பிரசன்னா பேசுகையில், “கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. அதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழக அரசு இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திலும் சேர்த்து 5 லட்ச கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வந்ததாக கூறி வருகிறது. இந்த மாநாடுகளால் பெறப்பட்ட முதலீட்டால் 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறிவருகிறது. ஆனால் இது வரை வந்த முதலீடுகள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவகத்தில் இதுவரை பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு மற்றும் புதிய ஜி.எஸ்.டி., ஆகிய மாற்றங்களால் 5 லட்சம் பேர் வேலையை இழந்ததாக தமிழக அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையிலேயே தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றம் கூட சமீபத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து கேள்வி எழுப்பியது, ஆனால் அரசு முறையாக பதிலளிக்கவில்லை.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகளை வழங்கி வந்தார், ஆனால் முதலமைச்சர் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல், அவர் என்ன மருத்துவரா? என்று கேள்வி கேட்டார். ஆனால் இன்று கொரோனாவை தடுக்க அவர் அமைத்த அமைச்சர் குழுவில் ஐந்து பேரில் மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் தமிழக அரசு சமூக பரவல் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் ஏமாற்றி வருவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

Also Read: “கலைஞர் பெயரில் சிறப்பான திட்டம்:தி.மு.க தொண்டர்கள் மனதில் இடம்பெற்ற நாராயணசாமி!”-மு.க.ஸ்டாலின் பாராட்டு!