Politics
“சாதகமான அதிகாரிகளுக்கு ஓய்வுக்குப் பிறகும் பணி நீட்டிப்பு” : எடப்பாடி அரசுக்கு கோடிகளில் கூடும் செலவு!
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா அதிகம் பாதிப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்திற்கு சென்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்க மாநில அரசின் முயற்சிகள் பெரிதும் பலனளிக்கவில்லை என தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையே காட்டுக்கிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியையும் தமிழக அரசு சந்திக்கிறது. குறிப்பாக, தமிழக அரசிற்கு இந்த ஆண்டு இறுதியில் கடன் அளவு நான்கரை லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிப் பற்றாக்குறையால் அரசு பத்திரங்களை விற்று ரூபாய் 8,650 கோடி திரட்டியிருக்கிறது. மத்திய அரசிடம் கடன் வரம்பை உயர்த்த அனுமதி கேட்டிருக்கிறது தமிழக அரசு.
இது தவிர எடப்பாடி அரசு, அரசு ஊழியர்களின் அகடிவிலைப் படி உயர்வை அடுத்த ஓராண்டிற்கு நிறுத்தி வைத்திருக்கிறது. ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அனைத்துத் துறை செலவுகளையும் குறைக்க வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறது. விளம்பரச் செலவை 25% குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், பரிசுப் பொருட்கள் வாங்குவதற்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூடுதல் இயக்குநர்கள், இணைச் செயலாலளர்கள், இணை இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெறுவோரை சிறப்புப் பணி அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்திருக்கிறது. அமைச்சர்களுக்கான மூத்த அல்லது சிறப்பு உதவியாளர்கள், சட்ட அதிகாரிகள், ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டத்திற்கான ஆலோசகர்கள் மற்றம் மேலாளர்கள் என 50க்கும் அதிகமானோரை தலைமைச் செயலகத்தில் மட்டும் நியமித்திருக்கிறார்கள்.
அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் ஓய்வூதியத்தை கழித்துக் கொண்டு அவர்களது புதிய சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு அதிகாரிக்கும் குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் மாத சம்பளம் வழங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதாவது, கூடுதலாக தலைமைச் செயலகத்தில் மட்டும் 1 கோடி ரூபாய்க்கு கூடுதல் செலவு மாதமாதம் ஏற்படும்.
குறைந்தபட்சம் ஓராண்டு என்றாலும் கூடுதலாக தலைமைச் செயலகத்துக்கு மட்டும் 12 கோடி ரூபாய் மற்றும் இதர வசதிகளோடு சேர்ந்து 15 கோடி ரூபாயாவது செலவாக வாய்ப்புள்ளது. அனைத்துத் துறைகளுக்கும் இதைச் சேர்த்தால் எத்தனை கோடி கூடுதல் செலவாகும் என்று தெரியவில்லை. இது தவிர, இந்தப் பணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் வேலைவாய்ப்பையும் இது தட்டிப்பறிக்கிறது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கூறுகையில், “ஒரு பக்கத்தில் பூச்செண்டு வாங்குவதைக் கூட குறைத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கொடுப்பதும், மற்றொரு பக்கத்தில் ஆடம்பரமாக வேண்டியவர்களை நியமித்து அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுப்பதும் மிகப்பெரிய அநியாயம். மேலும், இதுபற்றி ஆங்கில நாளிதழ் இப்படி நியமிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானோர் தமிழகத்தின் மேற்கு பகுதியைச் சார்ந்த ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
கொரோனா காலத்தைப் பயன்படுத்தி யாரும் கேள்வி கேட்க வாய்ப்பில்லாத போது அரசு தானடித்த மூப்பாக பல்வேறு பகுதிகளில் ஆடம்பரமான செலவுகளை செய்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசு இந்த நெருக்கடியை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதாகவே எண்ணத் தோன்றுகிறது” என விமர்சித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!