இந்தியா

கர்நாடகாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்: ‘இங்கு வராது’ என கணித்த அ.தி.மு.க அரசு என்ன செய்ய போகிறது?

வட இந்தியாவை அடுத்து கர்நாடகாவின் எல்லைக்குள்ளும் பாலைவன வெட்டுக்கிளிகள் நுழைந்துள்ளன. 

கர்நாடகாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்:  ‘இங்கு வராது’ என கணித்த அ.தி.மு.க அரசு என்ன செய்ய போகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய மக்களின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை பாலைவன வெட்டுக்கிளிகள் நடத்தி வருகின்றன.

சுமார் 35 ஆயிரம் பேர் உண்ணக் கூடிய விவசாயப் பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. ஆப்பிரிக்கா, அரேபியாவை அடுத்து இந்தியாவின் மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்த இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயிர்கள், மரங்களை அழித்து நாசமாக்கி வருகின்றன.

அதேபோல, உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா என வட மாநிலங்களில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தற்போது தென்னிந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டது.

கர்நாடகாவில் வெட்டுக்கிளிகள்
கர்நாடகாவில் வெட்டுக்கிளிகள்

காற்றின் வேகத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 200 கி.மீ தொலைவு வரை பறந்து செல்லக் கூடியதாக உள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவின் கிழக்கே உள்ள கர்நாடகாவின் எல்லையோரத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் நுழைந்துள்ளன. கோலார் தாலுகாவில் உள்ள கிராமங்களின் மின் கம்பங்கள் மற்றும் செடி,கொடிகளில் வெட்டுக்கிளிகள் இருப்பதை கண்டு பொது மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து, தீ பந்தம் ஏற்றி வெட்டுக்கிளைகளை விவசாயிகளே விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விவசாய பயிர்களை இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் குறிவைப்பதால், விளை நிலங்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என விஞ்ஞானிகளை போன்று தமிழக அரசு கணித்து மதிப்பிட்டிருந்தது. ஆனால், உண்மை நிலையோ, அண்டை மாநிலமான கர்நாடகாவின் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகளுக்கு தமிழகத்துக்குள் நுழைந்துவிடாமல் இருக்குமா?

ஆகவே, 3 நாட்களில் கொரோனா போய்விடும் என வாய்ப்பந்தல் விடுத்தது போன்று இந்த விவகாரத்திலும் எடப்பாடியின் தமிழக அரசு இருந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

ஏற்கெனவே, தமிழக விவசாயிகள் பல்வேறு துயரங்களில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்த வெட்டுக்கிளி படையெடுப்புகளும் வந்துவிட்டால் அவர்களின் கதி என்னவாகும் என்பதை உணர்ந்து போர்க்கால தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள களத்தில் இறங்க வேண்டிய நேரமாக உள்ளது என அரசியல் நோக்கர்கள், இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories