Politics

மு.க.ஸ்டாலின் மிசா கைது - மாஃபா பாண்டியராஜனுக்கும் அ.தி.மு.கவினருக்கும் சட்டப்பேரவை ஆவணமே ஆதாரம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவில்லை என, தரங்கெட்ட வகையில் அ.தி.மு.க அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தி.மு.க-வின் தியாக வரலாற்றையும், தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து தி.மு.கவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடும்படி தி.மு.க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தி.மு.கவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். நான் மட்டுமல்ல, தி.மு.கவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம்.

அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவுகொள்ளலாம்.

கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்" என விமர்சித்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

ஆனாலும், ஆவணங்களைத் தேடிப் படிக்க மனதற்ற அ.தி.மு.க-வினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள மிசா தடைச் சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த குறிப்பை பகிர்ந்திருக்கிறோம்.