Politics

எங்களின் பலம் தெரியாமல் கிரண் பேடி மோதிப் பார்க்கிறார் : கடுகடுக்கும் நாராயணசாமி 

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு அதிகாரங்களில் தலையிட்டு பணிகளை செய்யவிடாமல் மாநில அரசின் பணிகளை முடக்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். அவரின் அதிகார மீறல்களை எதிர்த்து நீதிமன்றம் வரை அம்மாநில முதல்வர் சென்றுள்ளார். உச்ச நீதிமன்றமும் கிரண்பேடி செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு உயர் நீதிமன்ற தடைக்கு இடைக்கால தடைவித்தாக்க முடியாது என்று கூறிவிட்டது.

இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, பின்னர் செய்தியாளர்களை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “இந்த மண்ணில் மக்கள் விரும்பாத திட்டத்தை உறுதியோடு எதிர்ப்போம். மக்களுக்கு புதுச்சேரி அரசு செய்யவிருக்கும் திட்டத்தை தடுக்க ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார். ஆட்சிக்கு எதிராக, அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என குற்றச்சாட்டியுள்ளார்.

“பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் ஆளுநர் கிரண்பேடி செவி சாய்ப்பதாக இல்லை. அவர்மீது தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவையும் மீறி கிரண்பேடி செயல்படுகிறார். எனவே அவரை பா.ஜ.க அரசு திரும்ப பெறவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான வைத்தியலிங்கம் கூட்டணி ஆதரவோடு 2 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் மூலமே எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என ஆளுநருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவர் எங்களுக்கு தொல்லைக் கொடுக்கிறார். அவரை எதிர்த்து போராடும் துணிவு சக்தி எங்களிடம் உள்ளது. அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.