Politics

தண்ணீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர் கோரிக்கை !

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை இருப்பது உண்மை. சென்னை உள்பட பல மாவட்டங்களில் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க கூடிய சூழ்நிலை இருக்கிறது. கிராமங்களில் குளம், ஏரி ஆகியவற்றில் தண்ணீர் இல்லை. கால்நடைகளும் தண்ணீர் இல்லாத நிலை. தண்ணீர் பிரச்சனை இல்லை அவற்றை தீர்க்கப்பட்டதாக அரசு சொல்லிக் கொண்டு இருந்தால் மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும்.

தமிழகத்தில் உள்ள யதார்த்ததை ஏற்றுக் கொண்டு அரசு தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க யாகம் செய்தால் நல்லது. அதற்காக உடனே மழை வந்துவிடுமா. யாகம் நடத்தி மழை பெய்தால் சந்தோசம். அதற்காக பூஜையை மட்டும் நம்பி இருக்க முடியுமா. இதனால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடுமா. அரசு தேவையான நிதியை ஒதுக்கி தண்ணீர் தேவைப்படும் இடங்களில் வினியோகம் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து கணிசமான நிதியை வாங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பிக்களும் தங்களது தொகுதி நிதியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய லாரிகளை வாங்கி தர வேண்டும். எம்.பிக்கள் நிதி வர 3 மாதங்கள் ஆகும். அதுவரை அரசு லாரிகளை வாடகைக்கு வைத்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும்.

பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி தரவேண்டும். பிரதமர் நிதியில் இருந்தும் ஒதுக்கி தரவேண்டும். மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை ஒதுக்கி போர்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு தண்ணீர் பஞ்சம் இல்லை, யாகம் செய்துவிட்டோம் என்று சொல்வதில் எந்தவித பயனும் இல்லை. யாகம் செய்ததால் மழை பெய்தால் தொடர்ந்து யாகம் நடத்தட்டும். இது ஒரு பக்கம் நடத்தாலும் மக்களுக்கு தண்ணீர் வினியோகமும் நடக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும்கட்சி படுதோல்வி அடைந்து உள்ளதால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வரும் தேர்தல்களில் தோல்வி கிடைக்கும் என்று ஆளும்கட்சிக்கு தெரியும். இதனால் தேர்தலை தள்ளி போட தான் முயற்சிப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் தி.மு.க, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் பேசுவோம் '' என தெரிவித்தார்.