murasoli thalayangam

“திருப்பரங்குன்றத்தில் த.வெ.க. அரசு நடந்து கொண்டது கொள்கை அல்ல, பயம்” : முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (27-11-2026)

கொள்கைப்படி நடந்ததா த.வெ.க. அரசு?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சியைப் போலவே இன்றைய த.வெ.க. ஆட்சியும் மிகச் சரியாக நடந்து கொண்டது என்று தவறான பரப்புரை செய்யப்படுகிறது. ‘இதை தி.மு.க. பாராட்டி இருக்க வேண்டாமா?’ என்று ஜால்ரா கட்சித் தலைவர் ஒருவரும் சொல்லி இருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் த.வெ.க. அரசு நடந்து கொண்ட முறை என்பது கொள்கை அல்ல, பயம். அதனால்தான் மறுநாளே உச்சநீதிமன்றத்தில் போய் மன்னிப்புக் கேட்டுள்ளது அரசு.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதே மலையில் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்க்காவுக்கு அருகே ஒரு கல் தூண் உள்ளது. இதில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சிலர் பிரச்சினை கிளப்பினார்கள். இதுதான் நீதிமன்ற விவகாரம் ஆனது. “காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடமே சரியானது, இவர்கள் சொல்லும் தூண் என்பது ஆங்கிலேயர் காலத்தில் நட்ட நில அளவைத் தூண்” என்பதை கடந்த தி.மு.க. ஆட்சி வரலாற்றுப் பூர்வமாக வாதிட்டது.

இதே பிரச்சினை இந்த ஆண்டும் வந்தது. உச்சநீதிமன்றம், ‘இந்த ஒரு நாள் மட்டும் அந்தத் தூணில் தீபம் ஏற்றலாம்’ என்று அனுமதி வழங்கியது. ‘இந்த அனுமதி ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதை மதுரை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்” என்பதுதான் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடந்தது. ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்து வீர்களா?’ என்று நீதிபதிகள் கேட்டபோது, த.வெ.க. அரசின் சார்பில் மதுரை ஆட்சியர், ‘ஆம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம்’ என்றுதான் சொன்னார். தனது அரசின் நிலைப்பாட்டைச் சொல்ல வில்லை. ‘தீர்ப்பை அமல்படுத்துவோம்’ என்றுதான் சொன்னார். இது த.வெ.க. அரசின் முதல் சறுக்கல்.

உச்சநீதிமன்றமே தனது இடைக்கால உத்தரவில் தூணுக்கு சட்டபூர்வமான எந்த உரிமையும் வழங்கவில்லை. அன்றைய தினம், வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே, காலம் காலமாக ஏற்றப்படும் இடத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திடீரென சுட்டிக்காட்டப்படும் இடத்தில் ஏற்றப்படவில்லை.

ஏன் ஏற்றப்படவில்லை என்பதற்காக த.வெ.க. அரசு சொன்ன காரணம்தான் அந்த அரசின் ஊசலாட்டத்தைக் காட்டுகிறது. ‘கல் தூணில் தீபம் ஏற்ற யாரும் வரவில்லை’ என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதுரை ஆட்சியர் சொல்கிறார்...

‘’ The time for the ceremony was fixed at 6.00 PM to 6.30 PM, as proposed by the Executive Officer herself. No team authorised by the Devasthanam come also at the place where it is customarily lit; and that the traditions and customs of the Temple be there after brought to the notice of the Court; and (d) that, as per the said resolution, the Thirukarthigai Maha Deepam was lit at about 6.00 PM on 24.11.2026 at the Deepa Mandapam near the Uchi Pillayar Temple on the Hill” என்று சொல்லி இருக்கிறார்.

“தீபம் ஏற்றும் நிகழ்வு நேரமான மாலை 6 முதல் 6.30 மணி வரை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு வரவேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் 6 மணி முதல் 6.30 வரையிலான நேரத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபமேற்ற வரவில்லை” என்றுதான் சொல்லி இருக்கிறார்களே தவிர, தங்கள் அரசின் கொள்கை நிலைப்பாட்டைச் சொல்லவில்லை.‘தீபம் ஏற்ற யாரும் வரவில்லை, வந்திருந்தால் ஏற்ற விட்டிருப்போம்’என்பதுதான் த.வெ.க. அரசின் நிலைப்பாடாக இருந்துள்ளது.

‘’தீபத் தூணில் தீபம் ஏற்றாததற்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மனு போட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

‘‘That I submit that I took all the steps to comply with the order in good faith. There has been no wilful deliberate disobedience on my part of any directions of this Hon’ble Court. I hold the orders of the Hon’ble Court in highest respect and remain committed to comply with every direction this Hon’ble Court may issue.I sincerely apologise for the lamp not being lit at the Deepathoon. The District Administration made every effort to secure the authorisation of the Devasthanam and the lighting of the lamp at the Deepathoon. However, the Board of Trustees, by its resolution dated 24.11.2026, resolved to light the lamp at the customary place. I submit that I will submit an additional status report with all supporting documents along with the same” என்கிறது மாவட்ட ஆட்சியரின் மனு.

இதுதான் த.வெ.க. ஆட்சியின் ஊசலாட்டமான நிலைப்பாடு ஆகும். இதில் கொள்கை எங்கே இருக்கிறது?

வழக்கமாக எல்லா விஷயத்திலும் நிறம் மாறுவது, பொய் சொல்வதுதான் இதிலும் நடந்துள்ளது.

மீனவர்கள் வாழும் இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட முயற்சித்தார்கள். அதை மீனவர்கள் எதிர்த்ததும், ‘நாங்கள் கட்டப்போவதாகச் சொல்லவில்லையே’ என்றார்கள். அதைப் போலத்தான், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம்’ என்றார்கள். ‘பின்னர் தீபம் ஏற்ற ஆள் வரவில்லை’ என்றார்கள். இறுதியில், ‘படுத்தே விட்டானய்யா’ என்பதைப் போல மன்னிப்பும் கேட்டாயிற்று. இந்த உருட்டலுக்கு கொள்கைக் குஞ்சரம் கட்டுவது தவறானது.

Also Read: “கோழைகளின் செயல்” : ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகள் சேதம் - தங்கம் தென்னரசு கண்டனம்!