murasoli thalayangam
த.வெ.க ஆட்சி பாசிச ஆட்சிதான் ; விஜய் ஒன்றும் அப்பாவி அல்ல - முரசொலி தலையங்கம் கடும் சாடல்!
முரசொலி தலையங்கம் (31-10-2026)
கலையரசன் கைதும் த.வெ.க.வின் பாசிசமும்!
தற்குறிகளின் உலகத்துக்கு வேண்டுமானால் கலையரசனைத் தெரியாமல் இருக்கலாம். அறிவுலகம் அவரை அறியும். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ‘The Dravidian Modal’ நூலின் ஆசிரியர். “தமிழ்நாட்டில் விலைவாசி எகிறி வருகிறது” என்று பேட்டி கொடுத்த காரணத்துக்காக வேட்டையாடி இருக்கிறது த.வெ.க. அரசு.
அவர் நடத்தப்பட்ட விதம் அச்சம் தருவதாக உள்ளது. மாநிலம் எத்தகைய மாஃபியாக்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பதற்கு கலையரசன் விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு.
கலையரசனை அதிகாலை ஐந்து மணிக்கு வீடு புகுந்து தூக்க வந்தவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் எந்தச் சீருடையும் அணிந்திருக்கவில்லை. அவர்கள் எந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது. வந்தவர்கள் போலீஸா, அல்லது த.வெ.க. இதற்கென வளர்த்து வரும் ஆட்களா எனத் தெரியவில்லை. போலீஸ் வாகனத்தில் வரவில்லை. தனியார் வாகனத்தில் வந்திருக்கிறார்கள். வந்த காரணமும் சொல்லவில்லை. கலையரசனை அழைத்துச் சென்றுள்ளார்கள். இரண்டரை மணி நேரம் காரில் வைத்து சுற்றிவிட்டு அவரை எங்கிருந்து ஏற்றிக் கொண்டார்களோ அங்கேயே கொண்டு போய் விட்டுள்ளார்கள்.
இப்படி யார் செய்வார்கள்? பிளாக் மெயில் தொழில் நடத்துகிறவர்கள் செய்வார்கள். குழந்தைக் கடத்தல்காரர்கள் செய்வார்கள். இப்படி ஒரு அரசாங்கம் செய்திருக்கிறது. ஆம், அமைச்சர் நிர்மல் குமார் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
ஐந்து ஆண்டுகளில் ஐந்து கட்சி மாறிய அமைச்சர் நிர்மல் குமார் சொல்கிறார்... ‘போலீஸ் ஸ்டேஷனில் தவறு நடந்து விட்டது’ என்று. எந்த போலீஸ் ஸ்டேஷனில் தவறு நடந்தது? தவறு செய்தவர்கள் யார்? தவறு செய்யச் சொன்னவர்கள் யார்?
திடீரென்று புகுந்து ஒரு ஆய்வாளரை, எழுத்தாளரை, விமர்சகரை – அதிகமாக ஆங்கிலத்தில் எழுதி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் ஒருவரைக் கடத்திச் செல்லும் அளவுக்கு அவரது புத்தகத்தில் எதையாவது குறைகண்டு பிடித்துவிட்டாரா அந்த போலீஸ்காரர்? அல்லது நிர்மல்குமார்? அல்லது விஜய்?
சாதாரணமாக ஒரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரோ, சப் இன்ஸ்பெக்டரோ, ஏட்டையாவோ நினைத்தால் இதைச் செய்து விட முடியுமா? ஏ.சி.; டி.சி., நினைத்தால் கூட இதைச் செய்ய முடியுமா? முடியாது.
கலையரசன் மீது அம்பை ஏவச் செய்தது யார்? அதைச் சொல்லுங்கள். அவர் செய்த குற்றம் என்ன?
பல்லாவரம் எம்.எல்.ஏ. காமாட்சி பற்றி தவறான பதிவு போட்டாராம், சொல்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். ‘கலையரசன் படமும் பேரும் இருந்தது’ என்று நிர்மல்குமார் சொல்வதே பொய். அந்தப் பதிவில் கலையரசன் படம்தான் இருந்தது. பெயர் இல்லை. கலையரசன் படத்தை வைத்திருக்கும் யாரோ ஒருவர் இப்பதிவு போட்டுள்ளார் என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு கலையரசன் எப்படி பொறுப்பு ஆவார்? ‘கலையரசன் பெயர் இருந்தது’ என்று பச்சைப் பொய்யை கூசாமல் சொல்கிறார் நிர்மல். ‘விஜய மணிகண்டன்’ என்ற பெயர்தான் அதில் இருக்கிறதே தவிர, கலையரசன் என்ற பெயர் இல்லை.
விஜய் படத்தைப் போட்டு ஆபாசப் பதிவுகள் போடுகிறவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வாரா விஜய்? இதற்கு லட்சக்கணக்கான ஆபாசப் பதிவுகளை ஆதாரமாகக் காட்டலாம்.
கலையரசன் பெயரைப் பயன்படுத்தி போலியான கணக்கு தொடங்கி, அவரைக் கைது செய்துள்ளார்கள் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பல்லாவரம் எம்.எல்.ஏ., காமாட்சி இது தொடர்பாக எந்தக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்? அதுவுமில்லை. காமாட்சியை விடுங்கள். பாவம் அவர். அமைச்சர்கள் நிர்மல்குமாரையும் சரத்குமாரையும் இன்னும் பலரையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளைப் பார்க்கவில்லையா? எத்தனை லட்சம் பேரை கைது செய்வீர்கள்? போதை வழக்கில், பாலியல் வழக்கில் ஒவ்வொரு த.வெ.க. ஆட்களும் சிக்கும் போது அதற்கான பின்னூட்டத்தைப் போய் பாருங்கள். எத்தனை லட்சம் பேரைக் கைது செய்வீர்கள்? ‘வெற்றி ஜெயில்’ தான் கட்ட வேண்டும்.
“வீட்டிலிருந்து காரில் ஏற்றிச் சென்று பல்லாவரம் அருகே காரை நிறுத்தி முக்கால் மணி நேரம், செல்போனில் யாரிடமோ பேசினார்கள். அதன் பின்னர் என்னை வீட்டில் இறக்கிவிட்டனர். பாதிக்கப்பட்ட என்னை, குற்றவாளி போல நடத்தினர்” என்று சொல்லியிருக்கிறார் கலையரசன். அவரைக் குற்றவாளி போல நடத்தச் சொன்னது யார்? போனில் யாரிடம் பேசினார்கள் கடத்தல்காரர்கள். கலையரசனை அச்சுறுத்தச் சொன்னது யார்?
இதுதான் பாசிசம் ஆகும். தனது அரசியல் எதிரிகளை பாசிசம் இப்படித்தான் அச்சுறுத்தும். இது கைதை விட மோசமானது. கைது என்பதற்குச் சட்டரீதியான அங்கீகாரம் உண்டு. ஆனால் அதிகாலையில் தூக்கிச் சென்று இரண்டு மணிநேரம் எங்கோ வைத்து மீண்டும் கொண்டு வந்து விடுவது – கைது,சிறைச்சாலை என்பதை விட மிக மோசமானது.
‘அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயாசமா?’ என்பது விஜய்யின் புகழ்பெற்ற டயலாக். பாயாசமாகச் சொல்லி மக்களை ஏமாற்றி பாசிசத்தை பந்தி வைத்துக் கொண்டு இருக்கிறார் விஜய். அவரது ஆட்சியை, அவரை, அவரது அமைச்சர்களை விமர்சிப்பவர்கள் அனைவரையும் பாசிச வேட்டை தான் ஆடிக் கொண்டு இருக்கிறார் விஜய்.
இந்த விவகாரத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் கருத்தைச் சொல்லி இருக்கிறார் த.வெ.க. ஆதரவுக் கட்சியின் தலைவர் ஒருவர். ‘அதிகாலை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று முதலமைச்சர் விஜய் சொல்லி இருக்க மாட்டார். எப்படி கைது செய்வது என்பது எல்லாம் காவல் துறை முடிவு செய்வதுதான். கும்பல் கூடக் கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் கைது செய்திருக்கலாம்’ என்கிறார் அந்தத் தலைவர். இந்த நூற்றாண்டின் மனித உரிமைப் போராளி விருதை அந்தத் தலைவருக்குத் தரலாம். அமைச்சர் பதவிக்காக ஒரு ஆட்சியை ஆதரிக்கலாம். கெட்ட ஆட்டத்தை எல்லாம் இப்படியா ஆதரிப்பது?
இப்போது நடந்து கொண்டிருப்பது பாசிச ஆட்சி தான். விஜய் அப்பாவி அல்ல. எதுவும் தெரியாதவர் அல்ல. எல்லாத் தவறுகளும் அவருக்குத் தெரிந்தே நடக்கின்றன. சினிமாவை ரூட் மாஃபியா மூலம் ஆட்டிப்படைத்த அதே பாணியை அரசியலிலும் செயல்படுத்தி வருகிறார் விஜய்.
Also Read
-
“கொள்கைத் தடமும் தொண்டறமும் என்றும் நமக்கு வழிகாட்டும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
கைது செய்ய வந்த கேரள போலீஸ்: நெஞ்சு வலி என்று நாடகமாடிய BLM பிரேம்குமார் - நடந்தது என்ன?
-
CBSE-க்கு முன்னுரிமை... நீட் தேர்வே ஒரு பெரிய மோசடி : அதிகாரப்பூர்வமாக வெளியான பகீர் தகவல்!
-
“படித்தவர்களின் வாக்குகளால் தோற்றோம்!” : உ.பி. பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு!
-
தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க நிர்வாகிகள்! : முழு விவரம் உள்ளே!