murasoli thalayangam

“நிர்மல்குமாருக்கு அறிவு இருக்குமானால் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை எடுத்துப் பார்க்கலாம்” : முரசொலி!

முரசொலி தலையங்கம் (18-09-2026)

இஸ்மாயில் கமிஷனும் ஷா கமிஷனும்!

ஐந்து கட்சி மாறி ‘அமைதிப்படை’ அமாவாசையாக நடந்து கொள்ளும் நிர்மல்குமார், எந்தவிதமான அரசியல் அறிவும் அற்ற வகையில் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – திராவிட நாயகன் – மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். எத்தனை தடவை இதற்கு பதில் சொன்னாலும், தனது பொய் நாக்கை மூடிக்கொள்வது இல்லை நிர்மல்குமார்.

1976 ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் மிசா சட்டப்படி திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் கைதானது குறித்து யாருக்கு எந்தச் சந்தேகம் இருந்தாலும் நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை எடுத்துப் பார்க்கலாம். அறிவு இருக்குமானால் வாசிக்கலாம்.

அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. ‘1976 பிப்ரவரி – 1977 பிப்ரவரி அரசியல் கைதிகளை கொடுமைப்படுத்தியதாகவும் அடித்ததாகவும் பதியப்பட்டது’ நீதியரசர் இஸ்மாயில் தலைமையிலான ஆணையம். இவர் தயாரித்த அறிக்கை 1978 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. மரமண்டைகள் இதை எடுத்துப் பார்க்கவும்.

•‘‘முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனாகிய மு.க.ஸ்டாலின் (வயது 23) சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு மாநிலத்தில் சட்டவிரோதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் கட்சியால் நடத்தப்படும் பல்வேறு பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, பிரிவினைவாத மற்றும் அவசரநிலைக்கு எதிரான கட்சியின் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். மாநில அரசின் சொந்தத் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் மத்திய அரசே காரணம் என்று கூறி, மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு வருகிறார். மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப் படாவிட்டால் தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று மிரட்டும் அளவிற்கு இவர் சென்றுள்ளார்.

இவர் தேச விரோத, அவசரநிலை எதிர்ப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான வலுவான கருத்துக்களைக் கொண்டவர். இவர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பொது அமைதியைப் பராமரிப்பதற்கும் கேடு விளைவிப்பதாக அமையும். எனவே, ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1971’–இன் பிரிவு 3(1)(a)(ii) மற்றும் பிரிவு 3(1)(e) ஆகியவற்றின் கீழ் இவரைக் காவலில் வைப்பது அவசியமாகும்” என்று 1–3–1976 அன்று கூடுதல் காவல் துறைத் தலைவர் மற்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டு கைது செய்யப்பட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

•அன்றைய அரசு தலைமைச் செயலாளர் சி.வி.ஆர்.பணிக்கர், ‘அரசியல் கைதிகள்’ என்றே தனது அரசாணையில் குறிப்பிடுகிறார்.

•அன்றைய ஜெயிலர், தலைமைச் செயலாளருக்கு 1976 மார்ச் 4 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். (ஆணைய அறிக்கை பக்கம் 50) ‘’அரசியல் கைதியாக சிறையிலிருந்த தன் மகன் எம்.கே.ஸ்டாலினை திரு.மு.கருணாநிதி 1976 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3 ஆம் நாளன்று 12.40 க்கும் 12.50க்கும் இடைப்பட்ட நேரத்தில் கண்டு பேசினார்’’ என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

•சிறைத்துறை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் எழுதிய கடிதம் பக்கம் 76 இல் இருக்கிறது. அதில், ‘‘தி.மு.க.வைச் சேர்ந்த அரசியல் கைதிகளை நான் விசாரணை நடத்தினேன்’’ என்று குறிப்பிடுகிறார்.

•சிறைச்சாலையை 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் பார்வையிட்டார். அப்போது என்ன நடந்தது என்பதை அறிக்கையில் (பக்கம் 285) அவர் குறிப்பிடுகிறார்...

‘‘9 ஆவது பிளாக்கையும் சிறைச்சாலை மருத்துவமனையையும் பார்த்து விட்டு நான் திரும்பி வரும் வழியில் 8 ஆவது, 7 ஆவது, 6 ஆவது பிளாக்குகளில் உள்ள ஆயுள் கைதிகள் உள்ளிட்ட பல கைதிகள் – என்னையும் என்னுடன் வந்தவர்களையும் பார்ப்பதற்காக காம்பவுண்டு சுவரை நோக்கி ஓடி வந்தனர். அவ்வாறு அவர்கள் ஓடி வரும் போது பின் வருமாறு திரும்பத் திரும்பக் கத்தினார்கள்...

‘மிசா கைதிகள் அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவதை நாங்கள் எங்கள் கண்களால் கண்டோம். சாட்சியம் அளிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று சொன்னார்கள்” என்று எழுதி இருக்கிறார் நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில்.

•அரசியல் கைதிகளாக கைதாகி சிறையில் இருந்தவர் என்ற அடிப்படையில் ஆணையத்தில் 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள் சாட்சியம் அளித்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின். (பக்கம் 287)

•1977 ஆம் வருடம் மார்ச் மாதம் 7 ஆம் நாளிட்ட O.S. 1830/77 இல் I.A. 4817/ 77 ல் திரு.எம்.கே.ஸ்டாலின் தாக்கல் செய்த ஆதரவான உறுதிமொழிப் பத்திரம் – முக்கியமான ஆதாரமாக ஆணையத்தில் இருக்கிறது.

•இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு அரசு உள்துறை அரசாணை எண் 379 ஐ 15.12.1978 அன்று வெளியிட்டுள்ளது.

9 ஆவது பிளாக்கில் வைக்கப்பட்ட கைதிகள் 2.2.1976 அன்று அடிக்கப் பட்டார்களா? என்ற கேள்விக்கு, ‘ஆம் தடுப்புக் காவல் கைதிகள் அடிக்கப்பட்டனர்’ என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

‘இவர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டனர்’ என்றும் அந்த அரசாணையில் உள்ளது. இதனை எழுதி இருப்பவர் அன்றைய தலைமைச் செயலாளர் சி.வி.ஆர்.பணிக்கர்.

இவற்றை எல்லாம் சொன்னால், அகில இந்திய ரீதியில் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.சி.ஷா கமிஷன் அறிக்கையில் ஏன் இல்லை என்று கேட்கிறார்கள். ஏற்கனவே கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியால் எம்.எம்.இஸ்மாயில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் இது பற்றி இன்னொரு ஆணையம் விசாரிக்க வேண்டியது இல்லை என்பதால் ஷா கமிஷன் இதனை விசாரிக்கவில்லை. இதுவும் ஷா கமிஷன் அறிக்கையில் பக்கம் 148 இல் இருக்கிறது.

‘‘TAMIL NADU – 20.125 An Enquiry Commission has already looked into the conditions of jails in Tamil Nadu. Therefore the Commission is not recording a note on the conditions in jails in Tamil Nadu. (Page 148)” என்று ஷா கமிஷன் அறிக்கையில் இருக்கிறது. சென்னை சிறைத் தாக்குதல் குறித்துதான் ஷா கமிஷன் விசாரிக்க வில்லையே தவிர மற்ற சிறைகளில் நடந்தவை அதில் உள்ளது.

தமிழ்நாட்டில் கைதானவர் எண்ணிக்கைப் பட்டியல் ஷா கமிஷன் அறிக்கை பக்கம் 35 இல் இருக்கிறது. தி.மு.க.வினர் தான் தமிழ்நாட்டில் அதிகம் கைதானார்கள் என்பது பக்கம் 42 இல் இருக்கிறது. சென்னை சிறை நீங்கலாக மற்ற சிறைகளில் நடந்த விவகாரங்கள் பற்றி பக்கம் 107 – 108 இல் இருக்கிறது. கட்டாய கர்ப்பத்தடை நடந்ததா என்பது பற்றி பக்கம் 192இல் இருக்கிறது. இவை அனைத்தும் வரலாற்று ஆவணங்கள் ஆகும்.

ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது போல இதை மறைக்க முடியாது. தற்குறிகள் அரசாண்டால் வரலாற்றுப் புத்தகங்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்பதைத் தான் நடைமுறையில் பார்க்கிறோம்.

Also Read: வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!