முரசொலி தலையங்கம்

வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!

“சர்க்காரியா கமிஷன் - பொய்யும் உண்மையும்!” எனத் தலைப்பிட்டு, வரலாற்றை உரைக்கும்படி எடுத்துரைத்த முரசொலி தலையங்கம்!

வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு;  இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை சட்டசபைக்குள் வந்து பேசினார் முதலமைச்சர் விஜய். ‘அவையில் இல்லாதவர்கள் பற்றி உண்மைக்கு மாறாகப் பேசுவது உரிமை மீறல்’ எனச் சொல்லி பேரவைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தி.மு.க.

‘என் மேசையில் கோப்பு உள்ளது’ என்று மிரட்டிக் கொண்டிருந்த விஜய், தனது மேசையில் இருப்பதாகச் சொன்னது இந்த அதர பழசான சர்க்காரியா கமிஷன் கோப்புகள் தான் போலும்!

புகார் கொடுத்தவரே விசாரணைக்கு வராமல், வழக்குப் போட்டவர் வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு ஆகும். இதனை விஜய் அறியமாட்டார். ஏனென்றால் அவருக்கு எழுதிக் கொடுத்த காகிதத்தில் அது இருக்காது.

தி.மு.க.வில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியில் இருந்து 1972 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டார் எம்.ஜி.ஆர். அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்களை அவர் கொடுத்தார். அவசர நிலைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் இந்தப் புகாரை தி.மு.க.வுக்கு எதிராக அன்றைய பிரதமர் இந்திரா பயன்படுத்திக் கொண்டார்.

1975 ஜூன் 26 ஆம் நாள் இந்தியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் பிரதமர் இந்திரா.

மறுநாளே, அதனைக் கடுமையாக எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம். தலைமைச் செயற்குழுக் கூட்டம் கூடியது. அதிகாலை 4 மணிக்கு கலைஞர் தன் கைப்பட தீர்மானத்தை எழுதினார். இந்தியாவிலேயே அவசர நிலைப்பிரகடனத்துக்கு எதிராக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தீட்டிய தீர்க்கமான தீர்மானம் அதுதான். இந்தியா முழுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதானார்கள். இங்கு தி.மு.க. ஆட்சி இருந்ததால் யாரும் கைது செய்யப்படவில்லை.

வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு;  இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!

3.1.1976 நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இந்திரா, இந்தியாவில் கட்டுப்பாடற்ற இரண்டு தீவுகள் இருப்பதாகச் சொன்னார். ஒன்று தி.மு.க. ஆண்ட தமிழ்நாடு, மற்றொன்று ஸ்தாபன காங்கிரசு ஆட்சி செய்த குஜராத். இதனை மனதில் வைத்து அப்படிச் சொன்னார். 20.1.1976 அன்று குஜராத் முதல்வர் பாபுபாய் படேல் சென்னை வந்தார்.

வடசென்னையில் நடந்த காமராசர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கலைஞரும் முதல்வர் பாபுபாய் படேலும் கலந்து கொண்டனர். இது பிரதமர் இந்திராவை கோபம் கொள்ள வைத்தது. இதனால் தி.மு.க. ஆட்சி 30.1.1976 அன்று கலைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைதாகி சிறை வைக்கப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

தி.மு.க.வை மேலும் பழிவாங்கத் திட்டமிட்ட காங்கிரஸ் அரசு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எம்.ஜி.ஆர். கொடுத்த புகாரை தூசி தட்டி எடுத்து சர்க்காரியா தலைமையில் கமிஷன் அமைத்தது. “எம்.ஜி.ஆர். கொடுத்த புகாரை வைத்துத் தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படுகிறது” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் ஓம் மேத்தா கூறினார். இதற்காக அஞ்சவில்லை கலைஞர்.

“இவை அனைத்தும் பழைய புகார்கள். இவை அனைத்துக்கும் பதில் அளித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் பேசி இருக்கிறேன். மீண்டும் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமானால் அங்கும் சொல்வேன். எனக்கு விளக்கம் அளிப்பதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை வரவேற்கிறேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பகிரங்கமாக அறிவித்தார்கள்.

பிரதமர் இந்திரா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று அன்றைய அகில இந்தியத் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொராஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், அசோக் மேத்தா ஆகியோர் பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கினார்கள்.

சர்க்காரியா கமிஷன் விசாரணை சென்னையில் நடைபெற்றது. புகார் சொன்ன எம்.ஜி.ஆர். தன்னை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை. புகார் சொன்ன யாரும், தங்களை தி.மு.க. தரப்பால் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வில்லை. அந்த விசாரணை கேலிக்கூத்தாகச் செல்வதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.

'நான் கொடுத்த புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சேலம் கண்ணன் எழுதிக் கொடுத்ததை நான் கொடுத்தேன்' என்று பகிரங்கமாக எம்.ஜி.ஆர். சொன்னார்.

வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு;  இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!

அடுத்து அமைந்த ஜனதா கட்சி அரசு, இந்த ஆணையத்தை ரத்து செய்யவில்லை. 'தி.மு.க. அமைச்சர்கள் மீது பிரதமர் இந்திரா போட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நாமே பிரச்சாரம் செய்துள்ளோம்' என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் சொன்னார்கள். 'ஜனதா ஆட்சி இந்தக் கமிஷனை கலைக்க வேண்டும்' என்று ஜனதா கட்சியின் முன்னாள் செயலாளர் ராஜிந்தர் பூரி எழுதினார்.

'கலைஞரைப் பழிவாங்க இந்திரா அமைத்தது தான் இந்தக் கமிஷன். அகில இந்தியத் தலைவர்கள் தலைமறைவாக இருந்த போது அவர்களை மறைத்து வைத்து காப்பாற்றியவர் கலைஞர். அதனால்தான் அவர் மீது இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டது' என்று ராஜிந்தர் பூரி எழுதினார்.

'நெருக்கடி நிலையை எதிர்த்தார் என்பதற்காகத் தான் கலைஞர் மீது சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் மீது பழிதூற்றி அரசியல் ரீதியாக வஞ்சம் தீர்ப்பதற்காகத் தான் சர்க்காரியா கமிஷனை இந்திரா அமைத்தார்' என்று பகிரங்கமாக மேடையில் பேசினார் சந்திரசேகர். (பிற்காலத்தில் பிரதமராக இருந்தவர்)

1977 ஆம் ஆண்டு பதவியை இழந்த பின்னர், மனம் மாறினார் இந்திரா காந்தி. நெருக்கடி நிலைக் காலத்தில் அனைத்துத் தவறுகளுக்கும் மன்னிப்புக் கோரினார் இந்திரா. (23.1.1978)

சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்த இந்திரா காந்தியிடம் சர்க்காரியா கமிஷன் பற்றி நிருபர்கள் கேட்டார்கள். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அ.தி.மு.க.வும் என்னை வற்புறுத்தினார்கள். அதனால் சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது” என்று பதில் அளித்தார் இந்திரா. (30.9.1979)

அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திரா, “நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அதை உணர்ந்து நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, அந்தத் தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று பகிரங்கமாகச் சொன்னார்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையை வைத்து இரண்டே இரண்டு வழக்குகளை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. 14.5.1981 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான சி.பி.ஐ. வழக்கறிஞர் நம்பீசன், ‘இரண்டு வழக்குகளையும் தொடர்ந்து நடத்த ஆதாரங்கள் இல்லை’ என்று குறிப்பிட்டார். அதனடிப்படையில் அந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ. நீதிமன்றம் 16.5.1931 அன்று தள்ளுபடி செய்தது. இதுதான் சர்க்காரியா கமிஷன் சரிந்த வரலாறு ஆகும்.

அரசியல் காரணங்களுக்காக புகார் கொடுத்து, அரசியல் நோக்கத்துக்காக கமிஷன் அமைக்கப்பட்டு, ஆதாரம் இல்லாமல் திரும்பப் பெறப்பட்ட வழக்குதான் சர்க்காரியா கமிஷன் வழக்குகள் ஆகும். இந்த வரலாறு ஏதும் தெரியாமல் கதாகாலட் சேபம் நடத்திக் கொண்டு இருக்கிறார் விஜய்.

banner

Related Stories

Related Stories