murasoli thalayangam
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
முரசொலி தலையங்கம்
20.08.2026
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹன்னூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சிறிதும் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்கள்.
வழிதவறிய தங்களின் மாடுகளைத் தேடி வந்தவர்களை, மான் வேட்டைக்கு வந்தவர்கள் என்றுகூறி கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது.
‘இந்த விவகாரத்தில் எனக்கு முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது' என்கிறார் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார். முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டு இப்படிச் சொல்வதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா?
‘கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடக் கூடாது' என்று ஆணவமாகச் சொல்லி இருக்கிறார். அவர் அந்த மாநில மக்களுக்கு நல்லது செய்தால் நாம் ஏதாவது கேட்கிறோமா? தமிழர்களைச் சுட்டுக் கொண்டே இருந்தால் அதைப் பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா? தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரைத் தரமறுத்தால் தட்டிக் கேட்கக் கூடாதா? காவிரி தண்ணீரைத் தடுக்க அணைக் கட்டினால் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா? கர்நாடகா ஏதோ தனி நாடு போல பேசுகிறார் டி.கே.சிவக்குமார்?
'மாடுகளைத் தேடி வந்தவர்கள்தான் இம்மூவரும்' என்று இறுதியில் முடிவானால் கொல்லப்பட்டவர்களைப் பிழைக்க வைக்க முடியுமா மாண்புமிகு முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரால்?
வழிதவறிய மாடுகளைத் தேடி வந்த தமிழர்களை, மான் வேட்டையாட வந்தவர்கள் என்று கர்நாடக வனத்துறை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முடிவெடுத்தது? அதற்காக உடனே சுட்டுவிடுவீர்களா? அதுதான் கர்நாடகாவில் சட்டமா? மான்வேட்டையாட கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடர்கள் வந்திருந்தால், அவர்களை கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் சுட்டுவிடுமா? சுட்டுவிட்டுத் தான் ஆட்சியில் இருக்கமுடியுமா? தமிழ்நாட்டில் கையாலாகாத, முதுகெலும்பற்ற அரசாங்கம் இருக்கிறது, அந்த அரசாங்கம் இதுபற்றி எல்லாம் கேட்காது என்று நினைத்துத்தான் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் 3 தமிழர்களை இரக்கம் இல்லாமல் சுட்டுள்ளது.
வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்திருந்தால் வழக்கு போடுங்கள். கைது செய்யுங்கள். நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள். குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்புத் தரட்டும். இவை அனைத்தையும் விட்டுவிட்டு, 'பார்த்ததும் சுடுவது' என்றால் அது அரச பயங்கரவாதம் அல்லவா? அப்படி கட்டற்ற அதிகாரத்தைக் காவல்துறைக்கு கொடுத்துள்ளதா கர்நாடக காங்கிரஸ் அரசு?
இதுதொடர்பாக கர்நாடகா வனத்துறையினர் கூறுகையில், “வனப்பகுதிக்குள் மான் வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று வழக்கம்போல கதை கட்டி இருக்கிறார்கள்.
கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோனிசாமி, பீட்டர், குமார் ஆகிய மூவரும் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் தோமையார்பாளையம், மாரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள். கர்நாடகா வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் எல்லை மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதாஸ் காயமடைந்துள்ளார்.
“வனத்துறை அதிகாரிகள் சொல்வது அனைத்தும் முரண்பாடாக உள்ளது. அவர்களது தரப்பில் குளறுபடிகள் உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. இதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை,” என்று ஹன்னூர் எம்.எல்.ஏ. மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு கர்நாடக அரசின் பதில் என்ன?
“இது ஒரு என்கவுன்டர் சம்பவம்” என கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி சொல்லி இருக்கிறார். அப்படியானால் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவெடுத்து சுடச் சொன்ன அதிகாரி யார்? கர்நாடக ஆட்சி மேலிடத்தின் அனுமதியுடன் தான் இக்கொலை நடந்ததா?
ஹன்னூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி ஆகியோர், 'அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது?” என்று கேள்வி எழுப்பி இருப்பதாக கர்நாடக மாநில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வனத்துறை அமைச்சர் சொல்வதும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சொல்வதும் முரண்பாடாக உள்ளதே?
இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாட்டை ஆளும் அரசு கண்ணை மூடி, கையைக் கட்டி மவுனமாக ஏன் இருக்கிறது ? கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைப் பார்த்து பயமா?
“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனத்தையும் வெளி யிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சொல்லி இருக்கிறார். “சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை. த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.” என்று விஜய் அரசாங்கத்தின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.
சட்டசபையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்டபோது, அமைச்சர் நிர்மல்குமாரால் ஒழுங்கான பதிலைச் சொல்ல முடிய வில்லை. “கர்நாடக அரசு உரிய விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடக அரசு உரிய விசாரணை நடத்தி வருவதால் அதில் குறுக்கிடத் தேவையில்லை” என்று சொல்வதற்கு தமிழ்நாட்டில் அமைச்சர் பதவி எதற்கு? கர்நாடகாவில் வேறு வேலைக்கு போய் விடலாமே?
மூவர் கொலை குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது த.வெ.க. அரசு. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் நிராகரித்தது த.வெ.க. அரசு. தமிழ்நாட்டில் எத்தகைய கேவலமான அரசு அமைந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
3 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கொலை வழக்காக பதிவு செய்து சி.பி. ஐ. விசாரிக்க வேண்டும். தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மூவர் குடும்பத்துக்கு உடனடியாக கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு த.வெ.க. அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
Also Read
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!