murasoli thalayangam
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
அமைச்சர் சரத்குமார் பவுடர் பயன்படுத்தி மாட்டிக் கொண்டிருக்கிறார். கேட்டால், 'மகளுக்கு மாத்திரையை நசுக்கிக் கொடுத்தேன்' என்கிறார். ஏ.டி.எம்.கார்டு வைத்து மாத்திரையை நசுக்க விஜய் கட்சி ஆட்களால்தான் முடியும் என்பதை தமிழ்நாடு அறிந்தது அன்றுதான். இப்படி ஒரு அமைச்சர் தி.மு.க. ஆட்சியில் இருந்திருந்தால்...?
திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது த.வெ.க. கட்சியைச் சேர்ந்த மிக நீண்ட காலம் விஜய் ரசிகையாக இருப்பவரே பாலியல் புகாரைக் கொடுத்துள்ளார். 'இரண்டு பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். ‘சரவணன் பெயரைச் சொல்லித்தான் அழைத்துச் சென்றார்கள்' என்று சொல்கிறார் அந்தப் பெண். சரவணன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவிடம் இவர் புகாரும் சொல்லி இருக்கிறார். இறுதியாக த.வெ.க. எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? புகார் கொடுத்த விஜய் ரசிகையை விஜய் கட்சியில் இருந்து தூக்கி விட்டார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கொலை மிரட்டலுக்கு உள்ளாகி வருகிறார் அந்தப் பெண். இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?
பழனி முருகன் சொத்தையே ஆட்டை போட்டு விட்டது ஒரு கும்பல். ரூ.100 கோடி சொத்தை ரூ.2 கோடிக்கு தாரை வார்ப்பது அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. மீடியாவுக்கு முன்னால் வாயை மெல்லுகிறார் ரமேஷ். 'இது எந்த மாதிரியான சொத்து என்றே தெரியாமல் கிரயம் செய்து கொடுத்துவிட்டார் அதிகாரி’ என்கிறார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ். 'தெரிந்தே தவறு செய்துள்ள பத்திரப்பதிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன்' என்கிறார் பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ். பக்கத்தில் நின்று பேட்டி கொடுக்கிறவர்களே மாற்றி மாற்றி பேசினார்கள்.இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?
”சும்மா எதை எடுத்தாலும் கோவில் சொத்து, கோவில் சொத்துன்னு சொல்லக் கூடாதுங்க” என்று பேட்டி தருகிறார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ். இப்படி தி.மு.க. ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சொல்லி இருந்தால்தினமும் ‘தினமலர்' நாளிதழ் தீப்பறக்கும் கட்டுரைகளைத் தீட்டி இருக்காதா? ரமேஷ்களுக்கு எதுவும் பேச தனி லைசென்ஸ் இருக்கிறதா?
சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் ‘சொர்ணாக்கா' ஸ்டைல் ஆடியோ தீயாய் பரவி வருகிறது. பக்கத்துத் தொகுதியில் இருக்கும் சொந்தக் கட்சிக்காரரை தனது தொகுதிக்குள் கால் வைக்கக் கூடாது என்று தடைபோடுகிறார் அமைச்சர். 'அவனை தூக்கி வைத்து ஜட்டியோட வைத்து அடித்தே கொன்னுடுவேன். என்னைப் பார்த்தா பைத்தியக்காரி போல் இருக்கா? என் தொகுதிக்குள் சாத்தூர்காரன் ஒருத்தன் காலை வைக்க விடமாட்டேன்' என்று அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் மறுமுனையில் பேசுகிறவரிடம்.இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்..?
'ஏதோ வீடியோ இருப்பதாகச் சொல்லி என்னைத் தொடர்பு கொண்டு சிலர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி அளித்துள்ளார்.இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்..?
அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக த.வெ.க.வைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி வழக்கே போட்டார். 'என்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் என்னிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னேன். மாற்றுக் கட்சிக்காரரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை நியமித்து விட்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், மகிளா நீதிமன்றத்தில் பதவி போடுவதாகவும் அவர்கள் பேரம் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது. அதையும் வெளியிடுவேன். எனது வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. உரிய ஆதாரங்களுடன் தாக்கல் செய்யத்தான் சொல்லி இருக்கிறார்கள்' என்று த.வெ.க.வைச் சேர்ந்த ஞானசௌந்தரி பேட்டி தந்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார் பெயர் அடிபட்டது. உடனே ஞானசௌந்தரியை த.வெ.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள்.இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?
அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் ஒன்றிய அரசின் அனுமதியுடன், டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வைத்துதான் செல்ல
வேண்டும். அமைச்சர்கள் ராஜ்மோகனும், கீர்த்தனாவும் சொந்த பாஸ்போர்ட் வைத்து வெளிநாடு சென்று திரும்பி இருக்கிறார்கள். இது குறித்து விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு இரண்டு அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்..?
‘எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' என்று சொல்லி எஸ்.பி.யிடம் மனு கொடுத்துள்ளார் உசிலம்பட்டி த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய். முதலமைச்சர் விஜய் ஆட்சியில் எம்.எல்.ஏ. விஜய்க்கே பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கின் லட்சணம் இதுதான்.
இவை தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் எல்லாச் சேனல்களும் அலறிக் கொண்டே இருந்திருக்கும். சமூகப் போராளிகள் யூ டியூப்களில் வியர்வை வழியவழிய பேட்டிகள் கொடுத்திருப்பார்கள். 'ஐயையோ தமிழ்நாடே' என்ற கூக்குரல் கேட்டிருக்கும். 'ஒன்றிய அரசு இதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதா?'என்று பலரும் எடுத்துக் கொடுப்பார்கள். ஆனால் இவை அனைத்தும் நடிகர் விஜய் பிலிம் ஆட்சி என்பதால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விஜய்யின் ஆணவத்துக்கும், தான் செய்வதுதான் சரி என்று நினைப்பதற்கும் காரணம், மீடியாக்களின் மிக மோசமான மவுனம்தான்.
Also Read
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!