
பெரியார் படத்துக்கு மாலை - பெரியார் திடலுக்கு போலீஸ்!
தனது கொள்கைத் தலைவராக தந்தை பெரியாரை அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் திடலுக்கு முன்னால் போலீஸைக் குவித்துள்ளார். அவரால் அறிவிக்கப்பட்ட கொள்கைத் தலைவரான பெரியாரைப் பற்றி அவருக்கே தெரியாது என்பது இதன் மூலம் தெரிகிறது.
‘நீட்' தேர்வை ரத்து செய்யுங்கள் என்று பரப்புரைப் பயணம் தொடங்குகிறது திராவிடர் கழகம். இது ஒன்றிய பா.ஜ.க.வை நோக்கி வைக்கும் கோரிக்கை ஆகும். அதைப் பார்த்து விஜய் ஏன் பதற்றம் அடைகிறார்? அதுகுறித்து பரப்புரை தொடங்கினால் இவருக்கு என்ன?
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்யச் சொல்கிறது திராவிடர் கழகம். இதுவும் ஒன்றிய பா.ஜ.க.வை நோக்கி வைக்கும் கோரிக்கை ஆகும். இதைப் பார்த்து ஏன் விஜய் பதற்றம் அடைகிறார்? அதுகுறித்து பரப்புரை தொடங்கினால் இவருக்கு என்ன?
இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் தொடங்குவதற்குத் தடை விதித்துள்ளது த.வெ.க. அரசு. இந்த பரப்புரைப் பயணம் எந்தெந்த ஊர்களுக்குச் செல்லப் போகிறது என்று காவல் துறை தலைமையிடம் முதலிலேயே பட்டியலைக் கொடுத்துள்ளார்கள். அந்தந்த ஊர் காவல் நிலையங்களில் அனுமதியை வாங்கிக் கொள்ளுமாறு திராவிடர் கழக நிர்வாகிகளிடம் டி.ஜி.பி. சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் பரப்புரைப் பயணம் தொடங்க இருந்தது. அதனைத் தடை செய்து, பெரியார் திடலையே முடக்கும் வகையில் மொத்தமாக போலீஸைக் குவித்துள்ளது த.வெ.க. அரசு.
பிரச்சாரம் செய்யும் அனுமதியைக்கூட மறுத்துள்ளார், 'ஜனநாயகன்’ படத்தில் நடித்து நாடாள வந்திருக்கும் விஜய்.
‘நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கிய கொடுங்கோலர்தான் விஜய். டெல்லியில் போலீஸ் எத்தகைய அராஜகத்தில் இறங்கியதோ அதைத்தான் விஜய் போலீஸும் தமிழ்நாட்டில் செய்தது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் போராடிய மாணவர்களை குண்டுக்கட்டாகப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றது போலீஸ். மாணவிகள் என்றுகூடப் பார்க்காமல் இழுத்ததால் அவர்கள் ஆடைகள் கிழிந்தன. வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றினார்கள். பல மாணவிகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டது. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்களை, சமூக விரோதிகள்போல் அடித்து, தரதரவென இழுத்துச் சென்று காவல்துறை கைது செய்தது. மதுரையில் தடியடி நடத்திக் கலைத்தார்கள். கல்லூரி விடுதிக்குச் சென்று கைது செய்தார்கள். வகுப்பறைக்குள் சீருடையுடன் சென்று கைது செய்துள்ளார்கள். ஒரு மாணவரை அசிங்கமான வார்த்தையால் திட்டுகிறார் திருவொற்றியூர் போலீஸ் அதிகாரி. மாணவியின் கையைப் பிடித்து, இழுத்து அராஜகம் செய்கிறார் ஆண் போலீஸ் அதிகாரி.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி வாசல்கள் அனைத்திலும் காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. சாதாரணமாக கூட்டம் கூடும் உரிமை, போராடும் உரிமை, முழக்கம் எழுப்பும் உரிமை ஆகியவற்றைக்கூட தடை செய்துவிட்டார்கள். அனுமதி பெற்றுப் போராடும் உரிமையைத் தடை செய்துவிட்டார்கள். டெல்லியில் போலீஸ் சீருடை இல்லாதவர்கள் கையில் லத்தியுடன் வந்து மாணவர்களை அடிக்கிறார்கள். இங்கும் அது தொடங்கி இருக்கிறது. சீருடையில் பெயர் பேட்ஜ் எடுத்துவிட்டு வருகிறது போலீஸ். இதுதான் இந்த நாட்டில் நடந்துள்ள மாற்றம் ஆகும்.
இப்போது 'நீட் தேர்வை ரத்து செய்' என்று பரப்புரைப் பயணத்தையே தடை செய்துள்ளார்கள். அடுத்து, 'நீட் தேர்வை ரத்து செய்' என்று அறிக்கை விடுவதைக் கூட தவறு என்பார்கள். ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடக் கூடாது என்றே கட்டுப்பாடு விதிக்கப்படலாம். மொத்தத்தில் அராஜகம், அராஜகம், அராஜகம் என்பதையே இலக்கணமாகக் கொண்டதாக த.வெ.க. ஆட்சி மாறிவிட்டது என்பதை இரண்டே மாதங்களில் உணர்ந்து விட்டது தமிழ்நாடு.
பெரியார் திடல் என்பது தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று. தமிழ்மக்களின் காவல் அரண் அது. அங்கே போலீஸைக் குவிப்பதன் மூலமாக மாபெரும் களங்கத்தை எடுத்து தன் கோட்டில் பூசிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
பெரியார் திடலை 'சமூகநீதியின் தலைமையகம்' என்றார் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். 'நான் மண்டல் அறிக்கையை எழுதி விட்டேன், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று சொன்னவர் பி.பி.மண்டல் அவர்கள். சமூகநீதியை அடையாளமாகக் கொண்ட அகில இந்தியத் தலைவர்கள் வந்து சென்ற இடம் அது. பெரியார் வாழ்ந்த இடம் அது. தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் அனைவரையும் வழிநடத்திய இடம் அது. அங்கேயே போலீஸைப் போட்டு, முடக்குவதன் மூலமாக விஜய் என்ன சொல்ல வருகிறார்?
‘இனி யாராக இருந்தாலும் இந்தக் கதிதான், இப்படித்தான் நடவடிக்கை இருக்கும்' என்று சொல்கிறார். 'பெரியார் எல்லாம் எனக்கு சும்மா படம்தான்' என்று சொல்கிறார். படங்காட்டிப் படங்காட்டி வளர்ந்தவர், கோட்டையிலும் படங்காட்டி காலத்தை ஓட்ட நினைக்கிறார்.
ஓடு ஓடு ஓடு...!
இது நாட்டுக்கு கேடு... கேடு... கேடு..!






