murasoli thalayangam
“விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (06-07-2026)
கவிழ்ந்து கிடப்பதைக் கவிழ்க்கத் தேவையில்லை!
”நாட்டில் இருக்கும் சூழ்நிலையைப் பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று மாதத்திலோ, ஆறு மாதத்திலோ கூட வரலாம். எப்போது தேர்தல் வந்தாலும் தயாராக இருங்கள்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். உடனே ‘போலி ஜனநாயகனின்' காப்பாளர்கள் பொங்குகிறார்கள். 'அவர் எப்படி அப்படிச் சொல்லலாம்? மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும்' என்று ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாகக் கூவுகிறார்கள்.
180 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளாரா விஜய்? 160 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளாரா விஜய்? பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களையாவது அவருக்கு கொடுத்தார்களா தமிழ்நாட்டு மக்கள்? இல்லை. 108 இடங்களில் தான் விஜய் வென்றார். அவருக்கு முதலமைச்சர் மகுடத்தை தமிழ்நாட்டு மக்கள் சூட்டவில்லை. கடன் வாங்கி, பிச்சை எடுத்து, பலரையும் ஏமாற்றி, பொய் சொல்லி, இன்னும் பல காரியங்க-ளைச் செய்து முதலமைச்சர் பதவியில் விஜய் உட்கார்ந்து இருக்கிறார். எனவே இது ஆடும் நாற்காலி என்பது நம்மை விட விஜய்க்கு நன்கு தெரியும். இது கவிழும் நாற்காலி என்பதும் நம்மை விட விஜய்க்கு நன்கு தெரியம்.
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தந்த 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருகிறோம். வாரியத் தலைவர் பதவி தருகிறோம் என்று பொய் வாக்குறுதி தரப்பட்டது. கொறடா உத்தரவை மீறினால் இவர்கள் பதவி போய்விடும் என்று அனைவருக்கும் தெரியும். அப்படிச் சொல்லி ஏமாற்றினார்கள். அதனால் 25 பேர் விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். பதவி கிடைக்கவில்லை என்றதும் 19 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு போய்விட்டார்கள். அதாவது விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த 19 பேர் இப்போது விஜய் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.
விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் இப்போது எம்.எல்.ஏ.வாகவே இல்லை. நாளையே நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் இவர்களால் வாக்களிக்க முடியாது. இவர்கள் அனைவரும் குதிரை பேரம் நடத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டவர்கள். 'நீங்கள் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் வரும். இடைத்தேர்தல் நடந்தால் உங்களை வேட்பாளர் ஆக்கி ஜெயிக்க வைக்கிறேன்' என்று விஜய் ஜீபூம்பா பாணியில் கொடுத்த பசப்பக்கு பல்லிளித்து ராஜினாமா செய்தவர்கள் இவர்கள். இவர்களது ராஜினாமா நாடகத்தின் சதிக்காட்சிகளை தேர்தல் ஆணையம் அறியம். எனவே இப்போதைக்கு இந்த ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரப்போவது இல்லை. ஜனநாயகன்' ரிலீஸ் போலவே கிடப்பில் போட்ட விஷயமாக இந்த ஆறு தொகுதி நிலைமை ஆகப் போகிறது.
காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர் பதவிக்காக விஜய்யை ஆதரிக்கிறது. 'தேர்தலுக்கு முன்பு போயிருந்தால் 70 எம்.எல்.ஏ., ஒரு துணை முதலமைச்சர், பத்து மந்திரிகள் வாங்கி இருக்கலாம்' என்று இப்போதே துணை முதலமைச்சராகவே பேசி வருகிறார் போக்சோ புகழ் அமைச்சர் விஸ்வநாதன். இவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யை ஒரு வழி செய்து விடுவார்கள்.
விஜய் ஆட்சியை ஆதரித்து வாக்களித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 'த.வெ.க.வின் கூட்டணியில் நாங்கள் இல்லை' என்று சொல்லி விஜய் நடத்திய கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு விஜய் ஆட்சியை ஆதரிக்க வெட்கமாக இருக்கிறது கம்யூனிஸ்ட்டுகளுக்கு!
விஜய் ஆட்சிக்கும், கட்சிக்கும் ஆதரவு தந்து விஜய் கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளார் வைகோ. 'உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரையம் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். இடைத்தேர்தலுக்கு நானே வந்து பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைக்கிறேன்' என்று விஜய் சொன்னதை வைகோவே பொதுவெளியில் சொல்லி குதிரை பேரத்தை உறுதி செய்துள்ளார். இவரது வாக்குமூலமே போதும் குதிரை பேரம் நடந்ததை உறுதி செய்வதற்கு.
காதர் மொய்தீன் கட்சியைப் பொறுத்தவரையில், விஜய் ஆட்சிக்கு ஆதரவு என்று காதர்மொய்தீன் கட்சி அதிகாரப்பூர்வமாக கடிதம் கொடுப்பதற்கு முன்பே, தங்களுக்கு இந்தக் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு இருக்கிறது என்று ஆளுநருக்கு விஜய் கடிதம் கொடுத்து விட்டார். ஒருவேளை காதர் மொய்தீன் ஆதரிக்கவில்லை என்றால் அந்த எம்.எல்.ஏ.வும் கட்சி மாறி இருப்பார். அதுதான் உண்மை.
அ.ம.மு.க.வின் ஒரு உறுப்பினர் ஆதரவு என்பது அப்பட்டமான குதிரை பேரம் ஆகும். இதற்கு வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் டி.டி.வி. தினகரன் பகார் கொடுத்துள்ளார். ஆளுநரிடமும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஒரு அமைச்சர் பதவிக்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விஜய் ஆட்சியை ஆதரிக்கிறது.
இவை அனைத்தும் சேர்ந்து தான் விஜய் முதலமைச்சராக நீடிக்கக் காரணமே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகப்பெரிய செல்வாக்கோடு அவர் அமரவுமில்லை. அப்படி அமர்ந்தவர் கவிழ்ந்து போவார் என்று நாம் சொல்லவுமில்லை. அவரே கவிழ்ந்து தான் கிடக்கிறார். கவிழ்ந்து கிடப்பவரைக் கவிழ்க்கத் தேவையில்லை.
அவர் கவிழ்ந்து கிடக்கிறார் என்பதற்கு உதாரணம் தான், சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறவர்களை ராஜினாமா செய்ய வைப்பது ஆகும். தன்னை ஆதரிக்கும் யாரையும் விஜய் நம்பவில்லை. நம்பத் தயாராக இல்லை. 'தங்களை வெற்றி பெற வைத்தவரையே காலை வாரிவிட்டு வந்தவர்கள் இவர்கள்' என்பதை விஜய் அறியமாட்டாரா? அதனால் தான் இவர்களை விட தன்னையே நம்புகிறார் விஜய். கூட்டணிக் கூட்டம் எல்லாம் முள்வேலிக்கு பெயிண்ட் அடிக்கும் காரியங்களே !
பல்வேறு பேரங்களின் மூலமாக அ.தி.மு.க. உறுப்பினர்களை விஜய் ராஜினாமா செய்ய வைக்கிறார். 12 பேர் வரை ராஜினாமா செய்ய வைப்பது அவரது திட்டம். இதற்கு யார் முதலீடு செய்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதை அதிகார மட்டங்கள் அறிந்தவர்கள் அறிவார்கள். இது யாருடைய ஆட்சி, யாருடைய நலனுக்கான ஆட்சி இது என்பதையும் அனைவரும் அறிவோம். இந்த முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியம் கவிழும் போது மொத்தமாய்த் தெரியும் !
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!