murasoli thalayangam

“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!

கரூர் காவல் அதிகாரிகள் 19 பேரை முதலமைச்சர் விஜய் இடம் மாற்றம் செய்துள்ளார். இப்படி ஒரு ஐடியா கொடுத்து, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று காட்டிக் கொடுத்த புத்திசாலி யாரோ? என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து முரசொலி நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், தனக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களை அச்சுறுத்தும் வகையில் பழிவாங்கியதுதான் அவரது முதல் நடவடிக்கை ஆகும். கரூர் காவல்துறையினரை முழுமையாக இடம் மாற்றி இருப்பதில் அவரது வஞ்சக எண்ணம்தான் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தமாக கரூர் காவலர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர்கள் உண்மையைச் சொன்னதுதான் காரணமா? உண்மையைத் தொடர்ந்து சொல்லக் கூடாது என்பதும் காரணம் ஆகும். ‘தூய சக்தி’ எனச் சிரிக்கும் மனிதரின் பல்லில் பெரிய கறை இருப்பதை கரூர் நடவடிக்கை காட்டுகிறது.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், வரலாற்றில் ஏற்பட்ட மாபெரும் களங்கம் ஆகும். அதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் விஜய் மட்டும்தான். ஆனால் அப்போது அங்கு காவலுக்கு இருந்த போலீஸ்காரரை வேட்டையாடி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். கரூர் காவல் அதிகாரிகள் 19 பேரை முதலமைச்சர் விஜய் இடம் மாற்றம் செய்துள்ளார். இப்படி ஒரு ஐடியா கொடுத்து, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று காட்டிக் கொடுத்த புத்திசாலி யாரோ?

கரூரில் காவல் துறையினரால் ஒரு அசம்பாவிதச் சம்பவம் நடந்திருந்தால் அந்த ஊரைச் சேர்ந்த அனைவரையும் மாற்றுவார்கள். ஆனால் விஜய், சொன்ன நேரத்துக்கு வராததால் சாப்பாடு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் செத்துப் போனவர்களுக்கு கரூர் காவல் துறை எப்படிப் பொறுப்பாக முடியும்? விஜய் வரும் வரை அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு வடை, பாயாசத்துடன் உணவு தயாரித்துத் தர வேண்டியது கரூர் போலீஸாரின் கடமையா?

27–9–2025 அன்று கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம், விஜயைத் தவிர ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. மனிதர்கள் செத்து விழுந்து கொண்டு இருந்தபோது விமானத்தைப் பிடித்து சென்னைக்கு ஓடி வந்தவர் அவர். ஒரு வாரம் கழித்துக்கூட கரூர் போய் அந்தக் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. அந்த குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஹோட்டலில் தங்க வைத்து தனித்தனியாக சென்று அழுகாச்சி காவியம் அரங்கேற்றினார் விஜய்.

கரூர் நிகழ்ச்சிக்கு அன்றைய தமிழ்நாடு அரசின் காவல் துறை சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்றையதினம் பாதுகாப்புப் பணிக்காக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 17 வீரர்கள் அங்கு பணியில் இருந்தனர். வழக்கமாக அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது.

கூட்டம் நடத்த அனுமதி கோரி கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டனர். ஆனால் செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினர். உரிய நேரம் சொல்லப்படவும் இல்லை. சொல்லப்பட்ட நேரத்துக்கு வரவும் இல்லை. மதியம் 12 மணிக்கு வருவார் என்று பொதுமக்களுக்குச் சொல்லப்பட்ட விஜய், இரவு 7 மணிக்குதான் வந்தார். 12 மணிக்கு அவர் வருகிறார் என்பதால் காலை 9 மணி முதல் கூட்டம் சேரத் தொடங்கியது. காலை 9 மணி முதல் நிற்கத் தொடங்கியவர்கள் இரவு 7 மணிக்குத்தான் விஜயைப் பார்க்கிறார்கள். ஏழு மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததற்கு விஜய் பொறுப்பா? கரூர் காவல் துறை பொறுப்பா?

காலை முதல் காத்திருந்த மக்களுக்கு குடிநீர் தரப்படவில்லை. குடிநீர் கிடைக்கவில்லை. உணவு வழங்கப்பட வில்லை. உணவு வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. வெளியில் அவர்களைச் செல்ல அனுமதிக்கவும் இல்லை. இவ்வளவு கூட்டம் கூடிவிட்டதே என்று சீக்கிரம் வரவும் இல்லை. தனது படத்துக்கான சூட்டிங்கை கரூரில் நடத்தி வருகின்றனர். அதனால்தான் நெரிசல் ஏற்படட்டும் என்று காத்திருந்தார்கள்.

இந்தச் செய்தி கிடைத்ததும் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து நள்ளிரவே கரூர் வந்து விட்டார். புயல் வேகத்தில் செயல்பட்டார். அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜியை அனைத்துப் பணிகளையும் கவனித்து உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்படாமல் இருந்திருந்தால் மரண எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

இது தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில் குற்ற எண். 856/2025 மற்றும் 864/2025 ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்பவர் 08.10.2025 அன்று கரூர் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைந்தார். மற்றொரு குற்றவாளியான த.வெ.க. கட்சியின் சேலம் (கிழக்கு) மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையதாக 09.10.2025 அன்று கைது செய்யப்பட்டார். வழக்கு முறையாக நடந்தால் முழு உண்மை தெரிந்துவிடும் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓடினார்கள். இப்போது சி.பி.ஐ.யில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சி.பி.ஐ. விசாரணையில் முழு உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை கரூர் போலீஸுக்குதான் இருக்கிறது. இரண்டு காவல் அதிகாரிகள் சி.பி.ஐ. முன் ஆஜராகி முழு உண்மையைச் சொல்லி இருக்கிறார்கள். இதனைத் தெரிந்து கொண்டுதான் அவர்கள் 19 பேரையும் இடமாற்றம் செய்துள்ளனர் விஜய் அரசு. 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது.

விஜய்க்காக காத்திருந்து காத்திருந்து மூச்சுத் திணறி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 18 பேர். குழந்தைகள் 10 பேர். இதில் ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தை 5. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களின் மரணத்துக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: ”ஹலோ சி.எம்.சார்… உங்களது தூய ஆட்சியில் ரத்தக் குவியல்கள்.. தினந்தோறும் பதற்றம்..!” - முரசொலி விமர்சனம்!