murasoli thalayangam

“பிளவுவாதம், பிரிவினைவாதம், வகுப்புவாதம் மட்டும்தாம் மோடிக்கு தெரியும்!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

பிரதமர் மோடிக்கு தெரிந்ததெல்லாம் பிளவுவாதம், பிரிவினை வாதம், வகுப்புவாதம் ஆகியவை மட்டும்தான். அவர் வந்த பாதையும் அதுதான். சென்று கொண்டிருக்கும் பாதையும் அதுதான். அவருக்கு தெரிந்த பாதையும் அதுதான்.

“தமிழ்நாட்டில் பீகார் மக்களைத் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்தகைய தலைவர்களை அழைத்து வந்து பீகாரில் வாக்கு கேட்கிறார்கள்” என்று பீகாரில் பேசியவர்தான் பிரதமர் மோடி. இப்போது உ.பி.யில் போய் தி.மு.க. மீதான வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குச் சென்றவர் அங்கே கங்கை விரைவுச் சாலையைத் திறந்து வைத்துள்ளார். திறந்து வைத்தவர், கங்கையைப் பற்றி பேசட்டும். அல்லது தன்னைப் பற்றி பேசட்டும். அங்கும் போய் தி.மு.க.வைப் பற்றித்தான் பேசி இருக்கிறார். அந்தளவுக்கு அவர் தி.மு.க. பயத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், மரியாதைக்குரிய முலயாம் சிங் அவர்களின் மகன், சமாஜ்வாதி ஜனதா கட்சியின் தலைவர் அகிலேஷ் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மிக நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான தி.மு.க. போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கைகோத்து செயல்படுகிறது'என்று குற்றம் சாட்டி இருக்கிறார் பிரதமர்.

“சமாஜ்வாதி கட்சியானது வளர்ச்சிக்கு எதிரானது மட்டுமல்ல, பெண்களுக்கும் விரோதமான கட்சி. உத்தர பிரதேசத்தில் இருந்து வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்ற அவர்கள், இம்மாநில மக்களை இழிவுபடுத்துபவர்களின் பக்கம் நின்றனர். உத்தரப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை எதிர்க்கும் தி.மு.க.போன்ற கட்சிகளுடன் கைகோர்த்து அதே நிலைப்பாட்டை எதிரொலித்தனர். இத்தகைய அரசியல், சமூகத்தைப் பிளவுபடுத்தி, வளர்ச்சியைத் தடுக்கும் போக்கை பிரதிபலிக்கிறது” என்று பேசி இருக்கிறார் பிரதமர்.

உத்தரப்பிரதேசத்துக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகி விடுவதை தி.மு.க. எதிர்த்ததா இல்லை. 'எந்த மாநிலத்துக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஏன் குறைக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறோம்'என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். ஆனால், 'உத்தரப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை எதிர்க்கும் தி.மு.க.' என்று பொய்க்கதை கட்டுகிறார்.

பெண்களுக்கு தொகுதிகளை அதிகரிக்கப் போகிறோம் என்ற போர்வையில், தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்தார் பிரதமர். உண்மையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் பிரதமருக்கு அக்கறை இருக்குமானால் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலேயே அதனை அவரால் நிறைவேற்றி இருக்க முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு என்று அதனை 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு செய்யப் போவதாகத் தள்ளிப் போட்டவர் பிரதமர் மோடிதான்.

மகளிருக்கு இடவதுக்கீடு தருவதில் பிரதமர் மோடிக்கு உண்மையில் அக்கறை இல்லை. இருந்திருந்தால் இப்போது இருக்கும் தொகுதிகளில் 33 விழுக்காடு இடவதுக்கீடு வழங்குவதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லையே! பா.ஜ.க.வின் பிதாம-கர்களான ஆர்.எஸ்.எஸ். வேண்டுமானால் மகளிருக்கான இடவதுக்கீட்டை மறுக்கலாமே தவிர, வேறு யாரும் எதிர்க்கப் போவது இல்லை. எனவேதான் நாடாளுமன்றத்தை நாடக மேடையாக ஆக்கி ஏமாற்றி வருகிறார் பிரதமர். மக்கள் மன்றத்-தையும் நாடக மேடையாக ஆக்கி வருகிறார்.

நாடாளுமன்றத்தில் அகிலேஷ் அவர்கள் பேசியதை பிரதமர் முழுமையாக அறியவில்லை போலும். ஏனென்றால் விவாதம் நடக்கும் போது பிரதமர் அவைக்கு வரவே இல்லை.

“பெண்கள் இடவதுக்கீட்டு மசோதாவை அவசர அவசரமாக ஏன் அறிமுகம் செய்கிறீர்கள்? இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு விட்டது. நாங்கள் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பையும் சேர்த்து கேட்டோம். ஆனால் மிகத் தந்திரமாக அதை தவிர்த்து விட்டீர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தால், ஜாதி ரீதியான கணக்கெடுப்பு அதன் அடிப்படையிலான இடவதுக்கீடு என்பது போன்ற கோரிக்கைகள் எழும்.

இவை அனைத்தும் பா.ஜ.க.வுக்கு எதிரான கொள்கைகள். அதற்காகவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தாமதப்படுத்தி, அதன் முடிவு வருவதற்குள் பெண்கள் இடவதுக்கீடு மசோதா அவசர அவசரமாக தாக்கல் செய்யப்படுகிறது. நீங்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். கொள்கையளவில் பெண்கள் இடஒதுக்கீட்டை முழுமனத்துடன் ஆதரிக்கிறோம். அதே நேரம், தொகுதி மறுவரையறை மூலம் அதைச் செயல்படுத்து வதை எதிர்க்கிறோம்” என்று தெளிவாகப் பேசினார் அகிலேஷ்.

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு எதிராக தி.மு.க.வும் பேசவில்லை. மகளிர் மசோதாவுக்கு எதிராக அகிலேஷும் பேசவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு அனைத்தையும் செய்யுங்கள் என்றுதான் அகிலேஷும் பேசினார். இவை அனைத்தையும் மறைத்து பேசுகிறார் பிரதமர்.

“தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையாது, இதை தமிழில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அதையும் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் நல்ல பிள்ளையைப் போல சொன்ன பிரதமர், 'உத்தரப் பிரதேசத்துக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை எதிர்க்கும் தி.மு.க.' என்று எதற்காக உத்தரப்பிரதேசத்தில் போய் பேச வேண்டும்? 'உத்தரப்பிரதேசத்துக்கு கூடுதல் தொகுதிகளை நான் இதுக்க நினைத்தேன்' என்று அங்கு போய் பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம் அல்லவா?நாடாளுமன்றத்தில் பேசியது நிஜ மோடியா? உ.பி.யில் பேசுவது நிஜ மோடியா? உண்மையில் அவர் மோசடி மோடி. அவ்வளவுதான்.

Also Read: 🔴LIVE : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..