murasoli thalayangam

சட்டம் ஒழுங்கு பற்றி பேச மிக்சர் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? : முரசொலி கடும் விமர்சனம்!

சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன என்று சொல்லி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான அருகதை அவருக்கு இருக்கிறதா?

ஜெயலலிதாவின் பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் ஐ.ஜி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்? கஞ்சா கடத்தல் அதிகமாக நடந்தது யார் ஆட்சியில்? மாமூல் பட்டியலில் அ.தி.மு.க. ஆட்சி காலத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்ததாக சி.பி.ஐ. வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருவதை பழனிசாமி மறுக்கிறாரா? தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது பழனிசாமி ஆட்சியில்தானே?

'பொள்ளாச்சி பாலியல் வழக்கு' பழனிசாமிஎன்று சொல்லத்தக்க வகையில் அவமானம் நடந்தது அவரது ஆட்சியில்தானே? இதுபற்றி

பத்திரிக்கையாளர்கள் அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டார்கள். “அப்படியெதுவும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்ற மகா யோக்கியர்தான் இந்த பழனிசாமி. சி.பி.ஐ.க்கு வழக்கு ஒப்படைக்கப்படும் வரை குற்றவாளிகளைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு முயற்சித்தது.

‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு'பழனிசாமி என்று அவரைச் சொல்லலாமே? தூத்துக்குடியில் 13 உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்ல உத்தரவிட்டவர்தான் இந்த பழனிசாமி. சுட உத்தரவிட்டு விட்டு, ‘டி.வி.யைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்' என்றவர்தான் இந்த பழனிசாமி.

'சாத்தான்குளம் லாக்கப் மரண வழக்கு'பழனிசாமிஎன்றே இவரைச் சொல்லலாம். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பெலிக்ஸ் என்ற அப்பாவும் மகனும் அடித்தே கொல்லப்பட்டார்கள். 'அவர்கள் உடல் நலமில்லாமல் இறந்தார்கள்' என்று சொன்னவர்தான் இந்த பழனிசாமி. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை மறக்க முடியுமா? 2019ஆம் ஆண்டு நடந்த 11 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று குற்றவாளிகள் உயிரிழந்ததோடு, 12 காவல்துறையினர், இரண்டு பொதுமக்கள் மற்றும் ஒரு குற்றவாளி என 15 பேர் காயமடைந்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நடந்த ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு குற்றவாளி உயிரிழந்ததோடு, இரண்டு காவல் துறையினர், ஒரு குற்றவாளி என மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 2021ஆம் ஆண்டு நடந்த ஆறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஐந்து குற்றவாளிகள் உயிரிழந்ததோடு, ஆறு காவல் துறையினர், இரண்டு குற்றவாளிகள் என எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

பழனிசாமி ஆட்சி காலத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலத்தில் சிறார்களுக்கு எதிராக 6 ஆயிரத்து 944 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆயிரத்து 881 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 216 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 847 சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆறுமாதத்தில் எவ்வளவோ குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்தன. அதனை நினைவூட்டிப் பார்ப்போமா?

கடலூர் அருகே உள்ள கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். கோவையில் உள்ள நான்கு கோவில்களின் முன்பு டயர்களை எரித்து கலவரத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலை காவல்துறையினர் மிரட்டிய தால் கோவிந்தராஜனும் அவரது மனைவி மீனாவும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்கள். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை சபீனா, தனது மொபட் வாகனத்தில் சென்றார். அவரிடம் இருந்து மொபட் வாகனத்தை காவலர்கள் பறிமுதல் செய்தார்கள். வீட்டுக்குச் சென்ற சபீனா, தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகில் உள்ள முடுக்கூரணிஎன்னும் ஊரில் இராணுவ வீரர் ஒருவரின் தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோர் கொலை செய்யப்பட்டு - அவர்களின் 7 வயதுக் குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மற்றும் காலில் கிடந்த கொலுசுகள் கொள்ளை அடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டாள். தூத்துக்குடி கல்வினை கிராமம் பகுதியில் 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டாள்.

சமுதாயப் பிரச்சினைகளைத் தட்டிக்கேட்ட சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் செல்வராஜ் நகரில் மகேந்திரன் கொலை செய்யப்பட்டார். சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் மேட்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு பேர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்த நிலையில் ராஜாவை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ராஜாவை உடல் பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்த நிலையில் அவர் தப்பி ஓடி விட்டார். சுமார் 16 மணி நேரம் தேடி ராஜாவை மீண்டும் கைது செய்து அவர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் காவலுக்கு வந்த இரண்டு காவலர்கள் முருகையன், கோகுல குமார் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதான் பழனிசாமியின் ஆட்சியாகும். குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதுகெலும்பு இல்லாமல் டி.வி. பார்த்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருந்த பழனிசாமி தான், இப்போது கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

Also Read: “முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!