murasoli thalayangam

நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமை உள்ளது… இறுதிப் போரை தொடங்கி உள்ளோம் - முரசொலி தலையங்கம்!

நிதிச் சீர்வும் மக்கள் வாழ்வும்!

முரசொலி தலையங்கம் 

19-02-2026

இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. கடந்த ஐந்தாண்டு காலத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் எந்தவகையில் எல்லாம் உன்னதமான நிலைக்கு உயர்ந்துள்ளார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது இடைக்கால நிதிநிலை அறிக்கை.

தமிழ்நாடு, இந்திய நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக இருக்கிறது. இரட்டை இலக்க உயர் பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டி இருக்கிறது. ஏற்றுமதி தயார் குறியீட்டில் நாட்டில் உள்ள முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மின்னணு பொருட்கள், மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. புத்தொழில் சூழல் தர வரிசையில் முன்னணி மாநிலம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிரின் பங்கேற்பு நாட்டிலேயே அதிகம்.

உயர் கல்விச் சேர்க்கையில் நாட்டிலேயே முதலிடம். தேசிய நிறுவன தர வரிசைக் கட்டமைப்பின் கீழ் இந்திய அளவில் உள்ள 100 உயர் கல்வி நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. வறுமைக் குறியீடுகளில் தமிழ்நாடு 1.43 விழுக்காட்டுடன் தேசிய அளவில் குறைவான வறுமைநிலை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.

இவை ஏதோ பொருளாதாரப் புள்ளிவிபரமாக மட்டும் பெருமைப்படத் தக்கதாக இல்லாமல் இந்த வளர்ச்சி, ஒவ்வொரு தனிமனிதரையும் எந்தளவுக்கு உயர்த்தக் காரணமாக அமைந்தது என்பதை நிதிநிலை அறிக்கை மனம் குளிரும் வார்த்தைகளாகச் சொல்லி இருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 1.31 கோடி மகளிர் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இத்திட்டத்தை தேர்தல் நேரத்தில் முடக்க பா.ஜ.க. ஆட்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடுக்க நினைத்ததை முறியடிக்கும் வகையில் மூன்று மாதத்துக்கான பணத்தை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்தினார் முதலமைச்சர் அவர்கள். கோடைக்கு குளிர்ச்சி தரும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் சேர்த்து 5 ஆயிரம் ரூபாயாக வங்கிக் கணக்கில் 6,500 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சாதனை இதுவரை செய்யப்பட்டது இல்லை.

விடியல் பயணம் திட்டத்தால் மாதம் தோறும் மகளிர் 888 ரூபாய் வரை சேமிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மகளிரை மகிழ்விக்கிறது விடியல் பயணம் திட்டம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2.55 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளார்கள். 87 லட்சம் பேர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயன் பெற்றுள்ளார்கள். 34 லட்சம் மகளிர் மகப்பேறு திட்ட நிதி உதவி பெற்றுள்ளார்கள். 19 லட்சம் பள்ளிப் பிள்ளைகள் காலையில் சூடான, சுவையான உணவு சாப்பிடுகிறார்கள். 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். பெற்றோரை இழந்த 10 ஆயிரம் குழந்தைகள் அன்புக்கரங்கள் திட்டத்தால் மாதம் தோறும் 2 ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். 27 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் கொண்டுபோய் தரப்படுகிறது.

48 லட்சம் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி கிடைத்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 38 அரசு கலைக் கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் கலைஞர் கனவு இல்லமாக வழங்கப்பட்டுள்ளன. 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்காக மட்டும் 60 அரசாணைகள் போடப்பட்டுள்ளன. 23 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து நன்மை செய்து வருகிறார் முதலமைச்சர். நிதிநிலைமை சீராக இருந்தால் தான் இத்தனை திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும்.

“ஏற்றுமதியைப் பெருக்கி, பணவீக்கத்தைக் குறைத்து, உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட்ட அதே வேளையில் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரையும் நாம் தொடங்கி இருக்கிறோம். மாநிலம் முழுவதும் பரவலானதொழில் வளர்ச்சியை உருவாக்கிட முன்முயற்சிகள் எடுத்தும் பின்னணியில் தொழிலாளர் நலன் காக்கவும் பெருந்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பெருந்தொழில்கள் மட்டுமல்ல சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி அடைய வழிநடத்தி இருக்கிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக வங்கிக் கடன் தரப்பட்டுள்ளது. மகளிர், மழலையர், முதியோர், தொல் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் என

கடைக்கோடித் தமிழரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கு பெறும் சூழல் உருவாகியிருப்பது தனிச் சிறப்பாகும். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடும் முனைப்பில் நீர் வளம்பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையைச் செய்திருக்கிறோம்.” என்கிறது இந்த அறிக்கை.

“மக்கள் நல அரசுக்கான இலக்கணத்தை வகுத்திடும் வகையில் நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையினை நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம் என்று தலை­நி­மிர்ந்து சொல்­வ­தற்­கான அனைத்­துத் தகு­தி­யும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு உண்டு.

நிதியும் வளர்ந்து சீராகி உள்ளது. மக்களின் வாழ்வும் வளர்ந்து மலர்ந்துள்ளது. இதுதான் தமிழ்நாட்டின் தனிச் சிறப்பாகும். அந்த வகையில் நிதிநிலை அறிக்கையானது சமூகநீதியின் அறிக்கையாகவும் அமைந்துள்ளது. பணத்தால் அளவிடப்படுவதாக மட்டுமல்லாமல் விளைவுகளால் அளவிடப்படுவதாக அமைந்துள்ளது இந்த இடைக்கால அறிக்கை.

Also Read: “சமூக நலத்திட்டங்களை, சமூக உரிமைகளாக கருதும் திராவிட மாடல் அரசு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!