murasoli thalayangam
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் : ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியை புகழ்ந்த முரசொலி!
முரசொலி தலையங்கம் (27-09-2025)
அரசின் குழந்தைகள்!
நான்கு ஆண்டுகால நல்லாட்சியின் சாட்சியாக அமைந்திருந்தது அந்த நிகழ்ச்சி!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற முகப்பின் கீழ் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்துப் பேசிய மாணவ, மாணவியர் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மனந்திறந்து பாராட்டினார்கள்.
ஒவ்வொருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி – அரசின் திட்டங்களின் பயனைப் பற்றிச் சொல்லும் போது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முகத்தில் பெருமிதம் பொங்கியது. ‘உங்கள் பேச்சைக் கேட்கும்போது நான் உணர்ச்சிவசப் பட்டேன்’ என்று சொன்னார் முதலமைச்சர் அவர்கள்.
மாணவ, மாணவியர் கண்கலங்கிச் சொன்னார்கள் என்றால் அது கேட்பவர் பலரையும் அழ வைத்தது. கண்கலங்க வைத்தது. அரசின் ஊக்கத்தொகை மூலமாக தைவான் நாட்டில் படிக்கும் முகம்மது யாசினின் தாயார் நூர்ஜகான், “தந்தையை இழந்த என் மகன் முகமது யாசின், என் குழந்தை என்று சொல்வதைவிட தமிழ்நாடு அரசின் குழந்தை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்” என்றார். இதைவிட பெருமைச் சொல் என்ன இருக்க முடியும்?
“என் மகள் இன்று இருக்கும் நிலையை நான் கனவில்கூட நினைத்தது இல்லை. இப்படிப்பட்ட முதலமைச்சருக்கு நான் நன்றி தெரிவிக்கவில்லை என்றால் ஒரு தந்தையாக இருக்கவே தகுதி இல்லாதவன் ஆவேன்” என்றார் அரசு ஊக்கத்தொகை மூலமாக மலேசியாவில் கல்வி பயிலும் சுபஶ்ரீ என்ற மாணவியின் தந்தையான வெங்கடேசன். தனது முதல் சம்பளத்தை தனது தந்தையிடம் மேடையில் வைத்துத் தந்தார் மாணவி பிரேமா. அவரைப் படிக்க அனுப்பவேண்டாம் என்று உறவினர் சொன்னதைமீறி அனுப்பிவைத்திருக்கிறார் பிரேமாவின் தந்தை.
‘நான் இஸ்ரோவில் பணியாற்றுவேன்’ என்றான் விஷ்ணு என்ற மாணவன். ‘நான் கொரியா செல்ல இருக்கிறேன்’ என்றான் இன்னொரு மாணவன்.
‘புதுமைப் பெண்’ திட்டத்தால் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் மாணவி ரம்யா, “அரசு தந்த பணத்தை வைத்து எனது அம்மாவுக்குக் காது கேட்கும் கருவி வாங்கித் தந்துள்ளேன். படித்து வேலைக்குச் சென்ற பின் அம்மாவின் காது அறுவைச் சிகிச்சையையும் மேற்கொள்வேன்” என்று சொன்னபோது நேரு அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அவரது பெற்றோர் எழுந்து நின்றார்கள். அவரது தாய் கதறிக் கதறி அழுதார்.
‘கணித ஆசிரியை ஆக வேண்டும்’ என்று சொன்ன மாணவியை அழைத்து அவருக்குத் தனது பேனாவைப் பரிசளித்தார் முதலமைச்சர். ‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பான் செல்ல உள்ள மாணவி சாலேஜா ஜோன்ஸ், ஜப்பான் மொழியில் பேசி அசத்தினார். ஏழ்மை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய சத்யா என்ற ஒரு தாய், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலமாக கல்லூரிக்குச் செல்கிறார். அவரது மகனும் அதே கல்லூரியில் படிக்கிறார். இதுதான் பின்னோக்கியும் சென்று முன்னோக்கி அழைத்து வரும் பாணியாகும்.
“மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக பல திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது. அதன் மூலம் பல மாணவர்களின் வாழ்க்கைத் தரம் மாறிக் கொண்டு வருகிறது. மாணவர்களின் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்” என்று மனம் திறந்து பாராட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
‘அரசாங்கமே உங்கள் பக்கமாக இருக்கிறது’ என்றார் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன். வாய் பேச முடியாத, காது கேட்காத தனது மகள் பேட்மிட்டன் விளையாட்டு மூலமாக இன்று பல்வேறு பதக்கங்களைப் பெற்று வர துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களே காரணம் என்று அந்த மாணவியின் தந்தை சொன்னபோது அதிர்ந்தது அரங்கம். பாரா தடகள வீரர் மனோஜ், தனக்கு துணை முதலமைச்சர் உதயநிதி செய்த உதவிகள் அனைத்தையும் பட்டியலிட்டார். இதுவரை அவருக்கு 48 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு வழங்கி உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மிகச் சிறப்பான மாத ஊதியத்துடன் வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளார் துணை முதலமைச்சர். அதனை பலரும் பெருமையாகச் சொன்னார்கள்.
நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வரிசையாக வந்து தங்களது வளர்ச்சியைச் சொன்னார்கள். திராவிட மாடல் அரசின் உதவியால் அரசுப் பள்ளியில் படித்து இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மொத்தமாக வந்து மேடையில் நின்றார்கள். காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் குழந்தைகள் வந்திருந்தார்கள். அவர்கள் கிச்சடி, பொங்கல், சாம்பார் என ஒவ்வொரு வகையையும் வாழ்த்தினார்கள். காலை உணவுத் திட்டத்துக்குப் பிறகு குழந்தைகளின் உடல் நலம், மனநலம் சீராகி வருவதாகவும், நோய்த் தொற்று குறைந்துள்ளதாகவும் மருத்துவர் அருண்குமார் எடுத்துச் சொன்னார்.
“கல்வியை நம்மிடம் இருந்து பறிக்கும் வேலை ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் அதனை அனைவருக்கும் அளிக்கும் பணியைத் திராவிட மாடல் அரசு செய்து வருகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன். “உங்களைத் தந்தை போலப் பார்த்துக் கொள்கிறார் முதலமைச்சர்” என்றார் இயக்குநர் மிஷ்கின். “கல்வி மட்டுமே ஏற்றத்தாழ்வுகளைக் களையும். அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி தர மறுத்தார்கள். அந்த நிலையை இன்றைய திராவிடக் கருத்தியல் மாற்றி இருக்கிறது” என்றார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
‘முதலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல அரசுகள் இருக்கின்றன. குழந்தைகளின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக இது இருக்கிறது’ என்றார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ‘பள்ளிக்கூடங்களுக்குள் சமூகநீதி, சமத்துவத்தைக் கொண்டுசெல்லும் அரசு இது. விடுதிகளில் சாதிப் பெயரை நீக்கியதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது.’ என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ். ‘தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் பெற்ற மாநிலம்’ என்றார் இயக்குநர் பிரேம்குமார்.
“இப்படி ஒருவரை முதலமைச்சராகப் பெறுவதற்கு நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள்” என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி இருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் அவர்கள். காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்களை தனது மாநிலத்திலும் செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார் அவர்.
“கல்வி மாணவர்களுக்கான சொத்து என்றால், மாணவர்கள் தான் எங்களின் சொத்து” என்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதைவிட இன்றைய இளைய சமுதாயத்துக்கு என்ன வேண்டும்?
“நீங்க படிங்க, உங்களுக்குப் பின்னால் நான் இருக்கிறேன்” – என்ற முதலமைச்சரின் குரல்தான் தாயின் குரலாக, தந்தையின் குரலாக, ஒரு தலைவரின் குரலாக, முதலமைச்சரின் குரலாக, அறத்தின் குரலாக, அன்பின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது....!
Also Read
-
நடிகர் விஜயின் பிரச்சாரத்தில் நெரிசல்... 31 பேர் பலியானதால் அதிர்ச்சி- ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி!
-
புதுச்சேரி... தொகுதிக்கு 30% வாக்காளர்களை கழகத்தில் இணைக்கவேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் !
-
மீண்டும் மீண்டுமா... நாமக்கல்லிலும் தவறான தகவலை சொல்லி வசமாக சிக்கிய நடிகர் விஜய்... அது என்ன ?
-
அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!
-
“கல்வியில் மட்டுமல்ல வேளாண்மையிலும் சிறந்த தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!