முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி அவர்களும் நேற்று (25.9.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் விழாவில், 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்க்கு வங்கி பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்கள்.
இந்த ஆண்டு, 2.57 இலட்சம் மாணவ, மாணவியர் “புதுமைப் பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள்.
சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தை கல்வி, விளையாட்டு, கலைகள் வாயிலாக கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக தமிழ்நாடு தன் பாதையில் முன்னேறி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. கல்வி எழுச்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தைக் கொண்டாடும் விதமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நேற்று (செப்.25) நடைபெற்றது.
இவ்விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஸ்கின், தியாகராஜன் குமாரராஜா, மாரிசெல்வராஜ் மற்றும் ரப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, முன்னாள் நிதியரசர் சந்துரு, கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் பயனடைந்த மாணவ - மாணவியர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். மாணவர்களின் கருத்துக்கள் அரங்கை நெகிழத்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் நிகழ்ச்சியை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் கவிதாபாரதியின் பதிவு பின்வருமாறு :-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
மிகவும் நெகிழ்வான விழாவாக நடந்தது.
மேடையேறியவர்களெல்லாம் கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகள்..
அரசு உதவியால் படிக்கும் மாணவர்கள்,
அரசின் மானியத்தொகையுடன் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள், நான் முதல்வன் திட்டத்தால் வெளிநாட்டில் வேலைக்குச் சேர்ந்த மாணவர்கள்
கல்லூரியில் படிக்கிற பெண்களுக்கு த் தரப்படும் ஆயிரம் ரூபாயைச் சேர்த்து வைத்து காது கேளாத அம்மாவுக்கு காது கேட்கும் கருவி வாங்கித்தந்த மாணவி
விளையாட்டுக்கு ஊக்கமும் உதவியும் பெற்று அரசு வேலையும் பெற்றிருக்கும் மாணவர்கள் என பலர் இந்த அரசின் கல்வி உதவிகளுக்கான சாட்சியங்களை நெகிழ்வாக எடுத்து வைத்தார்கள்.
இதை கிரிஞ்ச் என்று ஏகடியம் செய்யும் சில பதிவுகளையும் பார்த்தேன், மதிய உணவுத்திட்டத்தாலும் சத்துணவுத்திட்டத்தாலும் பசியாறியவர்களுக்கு இந்தப்பிள்ளைகள் பெறும் கல்வியின் மகத்துவம் புரியும்..
இந்த உதவிகள் இல்லாவிட்டால் இந்தக்குடும்பங்களின் அடுத்த தலைமுறையும் கூலிவேலைக்குத்தான் போயிருக்கும்
லட்சங்களைக்கொட்டி பெருமைக்குப் பெரிய பிராண்டான கல்விக்கூடங்களில் சேர்க்கும் எலைட் மக்களுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கதைகள் கிரிஞ்சாகத்தான் தெரியும்
சட்டக்கல்லூரியில் படிக்க விரும்பிய ஒரு கிராமத்து மாணவன்
CLAT தேர்வு எழுத நாலாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வழியில்லாமல் தன் ஆசையைக் கைவிட நினைத்தபோது ஒரு ஆசிரியர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அந்தக்கட்டணத்தைப் பெற்றுத்தந்திருக்கிறார்,
அந்த நாலாயிரம் சிலருக்கு ஒரு சட்டை அல்லது புடவையின் விலை, நேர்மையான வழக்கறிஞராகப் பணியாற்றி என்றாவது ஒரு நாள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாவேன் என்று சொன்ன ஒரு கூலித் தொழிலாளியின் மகனுக்கு அந்த நாலாயிரம் ஒரு தலைமுறைக்கனவுக்கான முதல்படி
பொம்பளைப்புள்ளைக்கு படிப்பெதுக்குன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க, மூணு நாள் சாப்பிடாம கெடந்து காலேஜ் போறதுக்கு அனுமதி வாங்கினேன்..
அங்க போனா கல்லூரிக்கட்டணத்துக்குப் பணம் பந்தல், அங்கிருந்த லெக்சரர் மேடம் பணம் கட்டி சேத்துவிட்டாங்க, புதுமைப்பெண் திட்டத்துல எனக்கு அரசாங்கம் ஆயிரம் ரூபா கொடுத்தாங்க, அதை வாங்கி மேடமுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன், அவங்க வாங்கவே மாட்டேன்னாங்க, வற்புறுத்திக் கொடுத்தேன் என்று சொன்ன ராணிப்பேட்டை ரம்யா என்னும் குழந்தைக்கு அந்த 'வெறும் ஆயிரம் ' தன்மானத்தின் பெருமிதம், கணக்குத்துறையில் பேராசிரியராக வேண்டும் என்று தன் ஆசையைச் சொன்ன அந்தக்குழந்தைக்குத்தான் முதல்வர் பேனா பரிசளித்தார்..
பத்து மைல் சைக்கிள் மிதித்துக் கொண்டு பள்ளிக்குப்போன எனக்கு பைக் வாங்கவேண்டுமென்பது பெரும் கனவு என்று சொன்ன மாணவனுக்கு நான் முதல்வன் திட்டத்தில் ஏவியேஷன் படிக்கும் வாய்ப்புக்கிடைத்திருக்கிறது, பைக்கில் போவதைக் கனவு கண்ட எனக்கு பறக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றான் மாணவன்
சேலத்தில் தறி நெய்யும் ஒருவருடைய மகள் நூறுசதவீத உதவித்தொகையுடன் மலேசியாவில் படிக்கிறார், வெளிநாட்டுக்கு வந்து படிப்பேன்னு நான் கனவுகூடக் கண்டதில்லை என்கிறார் அந்த மாணவி
உசிலம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் மாற்றுத்திறனாளி, அரசு தந்த ஊக்கத்தால் அவர் விளையாட்டுத்துறையில் உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார்
அரசு நிறுவனமான TNPL -ல் அதிகாரியாகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.. என் உயர்வுக்குக் காரணமான விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை நிமித்தமாக என் திருமணப் பத்திரிகை வைத்தேன், அவர் என் கிராமத்திற்கே வந்து என் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று நெகிழ்ந்தார் மனோஜ்
முதல்வரும் இதற்குக் காரணமான அமைச்சர்களும், அதிகாரிகளும் போற்றுதலுக்குரியவர்கள்.. அகரம் இதைச் செய்தபோது பாராட்டியவர்களுக்கு இந்த அரசு செய்யும்போது 'கிரிஞ்சாக'த் தோன்றுமானால் அது திராவிட ஒவ்வாமைதான்..
எல்லா நேரங்களிலும் இந்த அரசை தூக்கிக் கொண்டாடவேண்டிய அவசியமில்லை, நல்லதைப் பாராட்டுவதே அல்லதைக் கண்டிப்பதற்கான தகுதியாக நான் காண்கிறேன்
இறுதியாக ஒன்று
முதல்வர் ஸ்டாலினோ, துணை முதல்வர் உதயநிதியோ அரசுப்பள்ளிகளில் சத்துணவுக்குத் தட்டேந்தி நின்றவர்களல்லர்..
அவர்கள்தான் எல்லா வசதிகளும் செய்து தருகிறோம் படித்து மேலே வாருங்கள் என்று ஏழைக் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்
அரசுப்பள்ளிகளில் படித்து, சத்துணவை உண்டவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் ஏழைக்குழந்தைகளின் படிப்பைக் காவு கேட்கும் NEET-ஐக் கொண்டுவந்தார்கள், மாநில அரசின் வேலைகளை மற்ற மாநிலத்தவர்களுக்கும் வாரிக்கொடுக்கும்படி சட்டத்தைத் திருத்தினார்கள்
அதைவிட நம் ஏழைபங்காளி அண்ணன் படிப்பெதற்கு, ஆடு மேய்க்கப் போங்கள், குலத்தொழிலைப் பாருங்கள் என்கிறார்,
இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது..?” எனத் தெரிவித்துள்ளார்.