’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், அரசு விழாவாச்சே, கொஞ்சம் அறுவையாகத்தான் இருக்கும் என்று நினைத்து சென்ற என்னை, என்னைப் போன்றவர்களை அழவைத்து அனுப்பியது “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி.நேற்று (செப்டம்பர் 25) மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நானும் கலந்துகொண்டேன்.
முறையான நிகழ்ச்சி தொடங்கும் முன்பு அரசுப்பள்ளிப் பிள்ளைகள் சில பாடல்களையும், நடனங்களையும் வழங்கினார்கள். அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காத ஒரு மனநிலையில் இருந்த பார்வையாளர்கள் நாங்கள் திடீரென வந்து “பிள்ளை நிலா” பாடலைப் பாடிய ஒன்பது வயது சிறுமியின் திறமையைக் கண்டு அசந்துவிட்டோம்!
அடுத்த விழுப்புரம் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த 16 வயது மாணவியின் கம்பீரக் குரலைக் கேட்டு நான் அதிர்ந்தே போய்விட்டேன். என்ன ஒரு குரல்வளம்! என்ன ஒரு பாடும் ஆற்றல்! பிறகுதான் தெரிந்தது, அவர் ஏற்கனவே சமூக ஊடகங்களிலும், சூப்பர் சிங்கரிலும் புகழ்பெற்றவர் என்று.
இசைப்பின்னணி எதுவுமே இல்லாத இந்த சிற்றூர் குழந்தைகளுக்கு எங்கிருந்து வருகிறது இந்த ஆற்றல் என்று மூளையைக் கசக்கினாலும் விடைகிடைப்பதில்லை. இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாய் இதில் இன்னமும் தெளிவுகிடைக்காமல் இருக்கிறேன் நான்.
பின்னணி இசையற்ற குரலிசை மட்டும் வைத்து அற்புதமாய் சில பாடல்களைப் பாடி சிலிர்க்க வைத்தார்கள் இன்னொரு அரசுப்பள்ளிக் குழுவினர். அவர்களைப் பயிற்றுவித்தவர் யாரென தெரியவில்லை. அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அப்படியொரு நேர்த்தி!
நம்மூர்ப் பிள்ளைகளிடம் அவ்வளவு திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன. சரியான வழிகாட்டிகளையும், பயிற்சியாளர்களையும் கொண்டு இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதன்மூலம் அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மெச்சத்தக்கது.
நேற்று அங்கு நடந்த நிகழ்வுகளும், அதனால் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் பகிரவேண்டுமென்றால் பல பக்கங்கள் எழுதவேண்டி வரும். மேலும், அவற்றை ஒருவனுடைய கருத்தாகப் படிப்பதைவிட நீங்களே பார்த்து உணரவேண்டுமென்று நான் அறிவுறுத்துகிறேன்.
இது தொலைக்காட்சியில் வரும் என நினைக்கிறேன். தயவுகூர்ந்து அதை தவறாமல் பார்த்துவிடுங்கள். மிகப்பெரிய வாழ்வியல் படிப்பினை எல்லாம் இயல்பாக, எளிதாக அதன்மூலம் கிடைக்கும். இது மிகைப்படுத்தல் அல்ல.
நேற்றிரவு செய்திகளில் சில காட்சிகளைக் கண்டிருப்பீர்கள். அரங்கமே கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள்; அமைச்சர்கள் தொடங்கி, அடியேன் வரை. ஒருமுறை இருமுறை அல்ல; பலமுறை.
இந்த அரசின் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் திட்டங்கள் மூலம் உயர்ந்து வந்தவர்கள் பலரை அழைத்துவந்து மேடையில் நிறுத்தி பேசவைத்தார்கள். ஒவ்வொரு பிள்ளையும் இந்தத் திட்டங்கள் மூலம் அவரவர் குடும்பக் கதைகளையும், எப்படி அவர்கள் வாழ்விலும், குடும்பத்திலும் அற்புதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் விவரிக்க விவரிக்க யாராலும் விம்முவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
என்னை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்திய, அங்கு பேசிய எல்லா பிள்ளைகளிடமும் இருந்த ஒரு பொதுவான குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், “எனக்காகக் கடுமையாக உழைத்த, பல தியாகங்கள் செய்த, என்னை ஊக்குவித்த, பலர் அறிவுரைகளையும் எதிர்த்து என்னைப் படிக்கவைத்த என் பெற்றோரை தலைநிமிரச் செய்வேன், அவர்களை சிம்மாசனத்தில் அமரவைத்துப் பார்ப்பேன், அவர்களுக்கு நன்றிக்கடன் செய்வேன், அவர்கள்தான் என் வாழ்வு, லட்சியம்” என்று சொன்னதுதான். இந்த குடும்ப உணர்வு, மாண்பு பிற நாடுகளில் இருக்கும் வாய்ப்பு குறைவுதான் என நினைக்கிறேன்.
ஒரு நல்ல அரசு எப்படி தனிப்பட்டவரின் சிந்தனையையும், வாழ்வையும் மாற்றியமைக்க இயலும் என்பதை இன்னொரு முறை உணர்ந்தேன்.சுருக்கமாக இருவருடைய கதைகளைப் பகிர்கிறேன்.
10-ம் வகுப்பு படித்துமுடித்து மேலே படிக்க ஆசைப்பட்ட ஒரு சின்ன கிராமத்துப் பெண்ணை, தாய்மாமனுக்குக் கட்டிக்கொடுத்துவிட்ட பெற்றோர். பிள்ளை பெற்று வளர்த்துக்கொண்டிருந்த போதிலும் படிக்கும் தாகம் அடங்கவே இல்லை அந்தப் பெண்ணுக்கு. கணவனிடமும் பகிர, அவரும் சரியான தருணம் வரட்டும், பார்க்கலாம் என சொல்ல, மகன் வளர்ந்து, 12-ம் வகுப்பு முடித்து கல்லூரியும் செல்கிறான்.
இந்த சமயத்தில் புதுமைப்பெண் திட்டம் வர, அதற்கு விண்ணப்பிக்க, இப்போது அம்மாவும் பையனும் ஒரே கல்லூரியில், ஒரே பாடத்தில், ஒரே வகுப்பில் சக மாணவர்.
பெண்களுக்கு அரசு தரும் 1,000 ரூபாயை பலவிதமாக நக்கல் செய்பவரும் உண்டும். ஆனால் நேற்று தன் கதையைப் பகிர்ந்த ஒரு கிராமத்துப் பெண்பிள்ளையின் கதையைக் கேட்டால்தான் தெரிகிறது அது எவ்வளவு பெரிய விஷயமென்று!
அந்த ஆயிரம் ரூபாயை எப்படியெல்லாம் பிரித்து, ஒவ்வொரு ரூபாயையும் கணக்கிட்டு செலவுசெய்து தன் படிப்பையும், கொஞ்சம் வீட்டின் பராமரிப்பையும் பொறுப்பாகப் பார்க்கிறார் என்பது விளங்கியது. அதில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாயை சேமித்து, காதுகேளாத தன் அம்மாவுக்கு காதுகேட்கும் கருவி (Hearing aid) வாங்கிக்கொடுத்து, அரங்கத்திற்கும் அழைத்துவந்து, “இப்போ நான் பேசுறத என்னோட அம்மா கேட்டுட்டு இருக்காங்க” ன்னு சொல்லி, அவர்களையும் எழுந்து நிற்கவைத்து, அவர்களோடு சேர்ந்து நம்மையும் தேம்பித் தேம்பி அழவைத்த நிஜவாழ்வுக் கதைகளும் உண்டு” என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.