murasoli thalayangam

அடக்குமுறையின் உச்சம் - பா.ஜ.கவின் சர்வாதிகார சட்டத்திற்கு முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!

முரசொலி தலையங்கம் (22-08-2025)

அடக்குமுறையின் உச்சம்!

அடக்குமுறையின் உச்சம், இந்தச் சட்டம். சிலர் அடக்குமுறையை மறைமுகமாகச் செய்வார்கள். ஆனால் பா.ஜ.க. பட்டவர்த்தனமாகச் செய்யும்.

பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுதான் பா.ஜ.க கொண்டு வந்துள்ள சட்டம் ஆகும். 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 ஆவது நாள் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அமைச்சர் அமித்ஷா முன்னால் மசோதாவைக் கிழித்தெறிந்த நிலையில், இதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது பா.ஜ.க.

ஒருவர் தண்டனை பெற்றால் அவரது பதவி பறிபோய்விடும் என்று இதுவரை இருந்தது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யலாம். ஆனால் இன்றைய சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அதன் அடையாளமாகக் கைது செய்யப்பட்டாலே, 30 வது நாளில் பதவி பறிபோய்விடுமாம். 30 நாள் என்பது இரண்டு பதினைந்து நாட்கள். இரண்டு பதினைந்து சிறைக்காலம் கடந்தாலே பதவி போய்விடும். அதாவது இரண்டு முறை கைது நீட்டிப்பு செய்தாலே அவரது பதவி போய்விடும்.

சட்டம் கொண்டு வந்தவர் பிரதமர். அதில் அவரைக் கைது செய்யப் போவது இல்லை. நடப்பது பா.ஜ.க. ஆட்சி. அதன் ஒன்றிய அமைச்சர்கள் இதில் சிக்கப் போவது இல்லை. மாநில முதலமைச்சர்களை, மாநில அமைச்சர்களைக் குறி வைத்து இதனைக் கொண்டு வருகிறார்கள். தங்களது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இதனைப் பயன்படுத்தப் போகிறார்கள். அதற்காகவே இந்த ஆள்தூக்கிச் சட்டத்தை சர்வாதிகார பா.ஜ.க. அரசு கொண்டு வருகிறது.

குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டாலே இனி பதவி போய்விடும். பழிவாங்கும் எண்ணத்துடன் ஒருவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து, 30 நாள் சிறையில் இருந்தாலே போதும். பதவி போய்விடும்.

அதாவது நீதிமன்றத்திடம் இருந்த அதிகாரம், இப்போது காவல்துறை கையில் தரப்பட்டுள்ளது. விசாரணை தேவையில்லை. விவாதம் தேவையில்லை. தண்டனை தேவையில்லை. ஒரு எப்.ஐ.ஆர். போதும். இதை விட அநியாயம் இருக்க முடியுமா? ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் தண்டனை தரப்படும். ஆனால் அமித்ஷா சட்டப்படி, ஒருவர் மீது எப்.ஐ.ஆர். போட்டு கைது செய்தாலே அவர் குற்றவாளி தான்.

இன்னொரு கேலிக்கூத்தான அறிவிப்பை தனது எக்ஸ் தளப் பதிவில் சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. “கைது செய்யப்பட்டவர் உடனடியாக ஜாமீன் பெற்று விட்டால் அவர் இழந்த பதவியை மீண்டும் பெற முடியும்” என்று சொல்லி இருக்கிறார். அப்படியானால் இவர்கள் குற்றத்தை பெரிதாக நினைக்கிறார்களா? அல்லது ஜாமீனை மதிக்கிறார்களா? ஒருவருக்கு ஜாமீன் கிடைப்பதுதான் அவர் பதவியைத் தொடர்வதற்கான அளவுகோலா? இது என்ன அபத்தம்?

மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் தனது அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குப் போட்டு மிரட்டவே பா.ஜ.க. இதனைக் கொண்டு வந்துள்ளது. “தங்களுக்குப் பிடிக்காத, அரசியலில் ஒத்துழைக்க மறுக்கும் அரசியல் தலைவர்களை இந்தச் சட்டத்தின் மூலம் வளைக்கலாம் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. இந்த மசோதா சட்டமானால் யாரையும் கைது செய்து அவர்களின் பதவியைப் பறிக்கலாம் என்ற நிலை வந்துவிடும். ஜனநாயகத்தை ஒன்றிய அரசு படுகுழியில் தள்ளி உள்ளது” என்று எதிர்க்கட்சிகள் அனைவரும் நாடாளு மன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் 130 ஆவது திருத்தமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்படுபவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 75, 164, 239 ஏஏ ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதே பிரிவுகள் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்திலும் திருத்தப்படுகிறது. இதே பிரிவுகள் யூனியன் பிரதேச அரசு சட்டங்களிலும் திருத்தப்படுகிறது.

ஏதோ காலம் காலமாக தாங்களே ஆட்சியில் இருக்கப் போவதாக நினைத்து பா.ஜ.க. துரைமார்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தயாரித்த அடக்குமுறை வலையில் அவர்களே நாளைக்கு சிக்கித்தான் போவார்கள்.

“இது ஒரு கருப்பு நாள்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இதனை விடக் கருப்புச் சட்டம் இருக்க முடியாது. வாக்குத் திருட்டில் மாட்டிக் கொண்ட பா.ஜ.க., அதனை திசை திருப்பவும், வாக்குத் திருட்டை கண்டுபிடித்த ஜனநாயக சக்திகளை மிரட்டவும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

சந்தேகத்தையே சட்டம் ஆக்க நினைக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரை நீதிபதி ஆக்க நினைக்கிறார்கள். காவல் நிலையங்களை, நீதி மன்றங்களாக ஆக்க நினைக்கிறார்கள். நீதித்துறையின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். மன்னராட்சிக் காலத்துக்குத் திரும்ப நினைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பதவிகளை ஒரு எப்.ஐ.ஆர். மூலமாக பறிக்க நினைக்கிறார்கள். மொத்தத்தில் தாங்கள் நினைப்பதே சட்டம் என்பதை நிரூபிக்கவே இது கொண்டு வரப்பட்டது.

தேர்தல் முறை மூலமாக எதிர்கொள்ள நினைக்காமல் தங்கள் கைவசம் இருக்கும் புலனாய்வு அமைப்பு மூலமாக இதனைச் செய்வது பா.ஜ.க.வின் கோழைத்தனம் ஆகும்.

Also Read: கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!