murasoli thalayangam
“சங்கிகளின் கொச்சைப்படுத்தும் அரசியல்தான் சமூகத்தை நாசப்படுத்தி வருகிறது!” : முரசொலி கண்டனம்!
பாகிஸ்தான் நாடு, பயங்கரவாதிகளுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீதான தாக்குதல் அவசியமானது. ஆனால் அந்தப் போரை வைத்துக் கொண்டு செய்யப்படும் அரசியல் சகிக்க முடியாததாக இருக்கிறது. மனித மனங்களை எந்தளவுக்கு பா.ஜ.க., சங்கிக்கூட்டம் நாசமாக்கி வருகிறது என்பதை கடந்த ஒரு வாரமாக உணர்ந்து வருகிறோம்.
'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரை வைத்து குங்குமப் பொட்டு சிதறி இருப்பதைப் போல காட்சிப்படுத்தி, ஒரு போரை புரமோஷன் மெட்டீரியலாக மாற்றினார்கள். இந்த நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரை வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். அவர் அறிவித்தார். அவ்வளவுதான். முடிவை எடுத்தவர் அவர் அல்ல. பிரதமர் மோடி - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய மூவரும்எடுத்த முடிவு அது. அந்த முடிவை அவர் பொதுவெளியில் வந்து சொல்கிறார். அவ்வளவுதான். சொல்வது மட்டும் தான் அவரது வேலை.
'போர் நடக்கப் போகிறது' என்று சொன்னதும் விக்ரம் மிஸ்ரிதான். 'போர் நடந்து கொண்டிருக்கிறது' என்று சொல்லி வந்ததும் விக்ரம் மிஸ்ரிதான். அந்த வரிசையில் தான், 'போர் நிறுத்தம்' என்பதையும் சொன்னார். உடனே, விக்ரம் மிஸ்ரி 'தேசத் துரோகி' ஆகிவிட்டார். 'துரோகி', 'நம்பிக்கைத்துரோகி' என்ற பட்டத்தை சங்கிகள் இவருக்குத் தந்தார்கள். இவரோடு விட்டார்களா? இல்லை. இவர் மகள் லண்டனில் படிக்கிறார். அவரது சமூக வலைதளப் பதிவுக்குச் சென்று அவரையும் திட்டித் தீர்த்துள்ளார்கள். நிலைமை கட்டுக் கடங்காமல் போனதும் நொந்து போன விக்ரம் மிஸ்ரி, தனது எக்ஸ் பக்கத்தையே எடுத்துவிட்டார்.
ஒரே நாளில் தேசபக்தர், தேசத்துரோகி ஆக்கப்பட்டு விட்டார்.இவர்கள் உண்மையில் துரோகி, தேசத்துரோகி, நம்பிக்கைத் துரோகி என்று சொல்ல வேண்டியது யாரை? போரை நிறுத்திய பெரிய மனிதர்களைத்தான் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல முதுகெலும்பு இல்லாத இந்த சங்கிகள், ஒரு அரசு அதிகாரியை 'தேசத் துரோகி' ஆக்குகிறார்கள். 1989 முதல் உலகின் பல நாடுகளில் நிம்மதியாக வேலை பார்த்த விக்ரம் மிஸ்ரியால், இந்தியாவில் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. அவரையும், அவரது மகளையும் பிறப்பைச் சந்தேகித்து பதிவு போடுகிறது மதவாதக் கூட்டம்.
இதே போலத்தான் கர்னல் சோபியா குரேஷியும் கொச்சைப்படுத்தப்படுகிறார். பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டவர் ஒரு இசுலாமியப் பெண் என்று காட்டுவதே குரூரமானது. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்தச் சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் சங்கி அரசியல்தான் சமூகத்தை நாசப்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. அமைச்சர் குன்வர் விஜய்ஷா என்பவர், விஷ வாந்தியை எடுத்திருக்கிறார்.
"பகல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை வைத்தே பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்" என்று பேசி இருக்கிறார் பா.ஜ.க. அமைச்சர். எந்தபயங்கரவாதியின் சகோதரி, சோபியா குரேஷி? இசுலாமியர் என்பதால்அவர் இசுலாமிய பயங்கரவாதிகள் அனைவருக்கும் சகோதரி ஆகிவிடுவாரா? ஏதோ ஒரு இடத்தில் குன்வர் விஜய்ஷாவின் மதத்தைச் சேர்ந்தவர் குண்டு வைத்தால், அவர் குன்வர் விஜய்ஷாவின் 'சகோதரர்' ஆகிவிடுவாரா? என்ன குரூரம் இது? என்ன மாதிரியான விஷ விதைகளைத் தூவுகிறார்கள்?
இந்த நாட்டில் பயங்கரவாதம் என்பது குண்டு வைப்பதால் மட்டும் வளர்வது இல்லை, இது போன்ற பேச்சுகளால்தான் அதிகம் வளர்கிறது. பகல்காம் தாக்குதலை முன்வைத்து ஒரு வார காலத்தில் 184 வெறுப்புக் குற்றங்கள் நடந்திருப்பதாக சிவில் உரிமை பாதுகாப்புச் சங்கம் (APCR) தகவல் தந்துள்ளது. இசுலாமியர்களையும், காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது இந்த வன்மத் தாக்குதல்.
84 வெறுப்புப் பேச்சுகள், 39 தாக்குதல்கள், 19 சூறையாடல்கள்,3 கொலைகள் நடந்துள்ளன என்றும் சிவில் உரிமை பாதுகாப்புச் சங்கம் சொல்லி இருக்கிறது. மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய்ஷா மீது, மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றமே தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. உடனே உச்சநீதிமன்றம் போனார் அமைச்சர். உச்சநீதிமன்றத்தாலும் உச்சந்தலையில் அவர் கொட்டு வாங்கினார். இது தனிப்பட்ட விஜய்ஷாவின் கருத்து மட்டுமல்ல. பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் விஷமே இதுதான்.
கர்னல் சோபியா குரேஷியை, பத்திரிக்கையாளர்கள் முன் நிறுத்தியதே இதற்காகத்தான். இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு (சிக்னல்ஸ்) படைப்பிரிவின் அதிகாரிதான் கர்னல் சோபியா குரேஷி. இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது குடும்பமே இராணுவத்தில் பணியாற்றியது. இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவரது கணவர் காலாட்படை அதிகாரி. 2016 ஆம் ஆண்டு சர்வதேச ராணுவப் பயிற்சியில் மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்றன.
அதில் ஒரு படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் குரேஷி ஆவார். அவரைக் கொச்சைப்படுத்துவது என்ன வகை குரூரம்? சோபியா, இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் போரிட்டாரே தவிர, அவரது மதத்துக்கு எதிராக அல்ல. பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தமே தவிர, இது மாற்று மதத்துக்கு எதிரான யுத்தம் அல்ல. இதனை உணர வேண்டும். எல்லாவற்றையும் தங்களது மதவாத நோக்கங்களுக்காக மடைமாற்றத் துடிக்கும் பா.ஜ.க., அந்த நெருக்கடிக்குள் அதுவே சிக்கும். போரை நிறுத்திய பிரதமர் மோடிக்கு எதிராகவும் சங்கிகள் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு போட்டுக் கொள்கிறார்கள். பா.ஜ.க. விதைத்த விதைக்குள் அதுவே வீழவும் தொடங்கி இருக்கிறது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!